படமல்ல, நல்ல பாடம் - இயக்குனரை பாராட்டி வாழ்த்து தெரிவித்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தங்க மீன்கள் திரைப்படத்துக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் அந்த முகநூல் பதிவில், "பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு திரைப்படங்களுக்கும், எனக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் 48 மணி நேரத்திற்கான  வேலைகளும், நிகழ்வுகளும் இருக்கும் என்பதால் எனது அன்றாட பணிகளில் திரைப்படங்களுக்கு நேரம் இருந்தது கிடையாது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எனது வாழ்க்கை இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. இடையிடையே தவிர்க்க முடியாத அழைப்புகளை ஏற்று திரைப்படம் பார்ப்பது உண்டு.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசியல் நிகழ்ச்சிகளுக்காக வெளியில் செல்ல முடியாத சூழலில் கடந்த இரு ஆண்டுகளாக சங்க இலக்கிய நூல்களை படித்தல், சுக்கா... மிளகா... சமூகநீதி? இசையின் இசை ஆகிய இரு நூல்களை எழுதியும் நாட்களை நகர்த்தினேன். இப்போது புத்தகங்களைக் கடந்து  எனது நண்பர்களிடம் கேட்டறிந்து, அவர்கள் பரிந்துரைக்கும் திரைப்படங்களை பார்த்து வருகிறேன்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நான் பார்த்த திரைப்படத்தின் பெயர் தங்க மீன்கள் என்பதாகும். இந்தத் திரைப்படம் வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, நான் இப்போது தான் பார்த்தேன். தாமதித்துப் பார்த்தாலும் தரமான படம்.

மகள் மீது தந்தை வைத்துள்ள எல்லையில்லாத பாசமும், மகளின் விருப்பத்தை நிறைவேற்ற எல்லை கடந்து சென்று தந்தை உழைப்பதும் தான் தங்கமீன்கள் திரைப்படத்தின் மையக்கரு. இந்த பாசப் போராட்டத்தின் நடுவே அரசு பள்ளிகளில் கல்வியுடன் இணைந்து போதிக்கப்படும் அன்பையும், தனியார் பள்ளிகளில் கட்டணத்திற்காக மட்டும் எந்திரத்தனமாக கற்பிக்கப்படும் கல்வியையும் படம்  பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனரும் கதையின் நாயகனுமான இராம்.

பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் வருவதே கற்றுக் கொள்வதற்குத் தான். ஆனால், ஓர் ஆங்கில எழுத்தை எழுதத் தெரியாத குழந்தையை (சிறுமி சாதனா) அந்த எழுத்தின் பெயரால் அழைத்து அவமானப்படுத்தும் தனியார் பள்ளி ஆசிரியை. குழந்தையை அதன் விருப்பப்படி படிக்க அனுமதிக்கும் அரசு பள்ளி ஆசிரியை. இந்த இரு பாத்திரங்களின் மூலம் அரசு & தனியார் பள்ளிகளுக்கு இடையிலான வேறுபாட்டை உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு காட்சியில் மகிழுந்தில் வரும் தாத்தா, ‘‘அப்பாவின் மிதிவண்டியில் போக வேண்டாம்... எனது  மகிழுந்தில் செல்லலாம் வா’’ என்று அழைப்பார். ஆனால், அதை ஏற்காமல் பாடப்புத்தகப் பையை மகிழுந்தில் அனுப்பி விட்டு,  தனது தந்தையின் மிதிவண்டியில் செல்கிறாள் கதையின் நாயகியான சிறுமி.  மகள்களுக்கு மகிழுந்து சுகத்தை விட, தந்தையின் அன்பும், நெருக்கமும் தான் முக்கியம் என்பதை இதை விட சிறப்பாக உருவகப்படுத்தியிருக்க முடியாது.

கதையின் நாயகன் தமது மகளின் பள்ளிக்கட்டணத்தை செலுத்துவதற்கு பணம் இல்லாமல் தடுமாறுவதும், கடன் கேட்டு அலைவதும் வெறும் காட்சி அல்ல... இன்றைய தமிழகத்தின் எதார்த்தம். அதனால் தான் ‘‘தமிழகத்தில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்’’ என்று வாக்குறுதி அளித்து வருகிறது. ஏழை, பணக்காரர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் சமச்சீர் கல்வி முறை தத்துவத்தை பா.ம.க. உருவாக்கி, திமுக அரசை வலியுறுத்தி செயல்படுத்த வைத்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையின் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று கட்டாயக் கல்வி, கட்டணமில்லாதக் கல்வி, சுகமானக் கல்வி, சுமையற்றக் கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாடு ஆகும். இதைத் தான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். தங்கமீன்கள் படத்தின் பல காட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை முழக்கங்களின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன. அதற்காகவே இயக்குனர் இராமுக்கு பாராட்டுகள். இத்தகைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும்!

மொத்தத்தில் அரசு பள்ளி நிர்வாகங்கள், தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை கற்பித்திருக்கிறது தங்கமீன்கள்.

தங்கமீன்கள்….  நல்ல பாடம்…. பாராட்டுகள் இராம்"

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் தனது முகநூல் வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss wish Thankameengal Movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->