நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போகிறது "இரட்டை இலை” தான் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்.!
election 2022 ops eps letter to admk member
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அவர்களின் அந்த கடிதத்தில், "நிழலின் அருமை வெயிலில் தெரிவது போலவும், நேர்மையின் பெருமை நிம்மதியில் அறியப்படுவது போலவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் அருமையும், பெருமையும் விடியா பொழுதாக, முடியா இருளாக விளங்கும் திமுக ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாய் தெரியத் தொடங்கி இருக்கும் காலகட்டத்தில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் வெற்றி உறுதி , உறுதி என்று எட்டுத் திக்கிலும் இருந்து மக்களின் மன ஓசை எதிரொலிக்கிறது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புகள் இருந்தும், கடந்த காலங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சிகளில், மக்களுக்கு அளிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளைப் பற்றி அறிந்திருந்தும், திறமையும், தியாக உள்ளமும் இல்லாத காரணத்தால் திமுக அரசு, வாக்களித்த தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்; நீட் தேர்வு உடனடியாக ரத்து; நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசி, மக்களை மதி மயங்கச் செய்யும் பிரச்சாரங்களால், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்று ஆட்சி நடத்துவது மக்களின் நலன் காக்க என்பதை மறந்துவிட்டு,
"மக்கள் நலன்., மக்கள் நலன்., என்றே சொல்லுவார்:
தம் மக்கள் நலன் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" என்று புரட்சித் தலைவர் பாடி, சுட்டிக் காட்டியதை போல, தங்கள் குடும்பங்களை வளப்படுத்திக் கொள்ளும் செயல்களில் ஈடுபட்டு இருப்பது ஊரறிந்த உண்மை.
எனவே, இந்தத் தேர்தல் களத்தில் நம்மோடு இணைந்து பணியாற்றும் கூட்டணிக் கட்சியினர், தோழமைக் கட்சியினர், ஆதரவளிக்கும் பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றின் அன்பையும், நட்பையும், உழைப்பையும் முழுமையாகப் பெற்று களப் பணி ஆற்றுங்கள்.
"ஏழை மனம் கோவப்பட்டா என்னென்னவோ நடக்கும் - அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா நிம்மதி கிடைக்கும்" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளை செயல் வடிவப்படுத்தி, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் "இரட்டை இலை" யின் வெற்றியை உறுதி செய்திட அனைவரையும் அன்போடு வேண்டுகிறோம்.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ;
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?"
இவ்வாறு அந்த கடிதத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துளளனர்.
கடிதத்தில் முழு விவரம் :
English Summary
election 2022 ops eps letter to admk member