தேர்தல் நடைமுறைகளில் அரசின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - தேர்தல் ஆணையர் திட்டவட்டம்.!
Election Commissioner
சட்டப்பேரவை தேர்தல் செயல்பாடுகளில் அரசின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை தற்போது தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகளையும், பணிகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா நேற்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, "தேர்தல் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளில் அரசின் தலையீடு, பண பலம் உள்ளிட்டவைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதையும் அனுமதிக்க முடியாது என்றும் அரசு நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்படுவதை தேர்தல் ஆணையம் சகித்துக் கொள்ளாது என்றும் தெரிவித்தார். விதிமுறைகள் மீறப்படுவதை வாக்காளர்கள் சி-விஜில் செயலி மூலமாக தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் மணிப்பூர் மாநிலத்தில் 16.4 சதவீத வாக்குச்சாவடிகளை பெண்கள் மட்டுமே நிர்வகிக்க உள்ளார்கள் என்றும் இது பாராட்டுதலுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் முழுமையாக நேர்மையான முறையில் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு குறைவாக பதிவாகக் கூடிய இடங்களில் வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தெரிவித்தார்.