''திமுகவினர் ஏன் இந்த இரட்டை வேடம்..? சம கல்வி என்பது நமது உரிமை'' அண்ணாமலை பதிலடி..!
Equal education is our right Annamalai
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பா.ஜ., தி.மு.க., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஹிந்தியை திணிப்பதாக மாநில அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.இதனை, மத்திய அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், ''சம கல்வி என்பது நமது உரிமை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஸ் 'தமிழகத்தின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் செயல்படும் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம் எனவும், தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மொழி பிரச்னையை விமர்சிப்பது தவறாக வழி நடத்துவது என்பது மட்டுமல்ல. உண்மைஅவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சில கருத்துகளை தெரிவித்தார். ஆனால், அவர் எங்கு தவறு செய்கிறார் என்றால்,
தி.மு.க., அரசு தனது தவறுகளை மறைக்க அமைத்த ஒரு பிரிவு பிப்.,2025ல் தமிழகத்தில் 1835 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இருப்பதாகக் கூறியது. இன்று, கல்வி அமைச்சர் அதை 1,635 சி.பி.எஸ்.இ., பள்ளிகளாகக் குறைத்து உள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் 1.09 கோடி பேர் படிப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனால், பள்ளி கல்வித்துறை சார்பில் கொள்கை குறிப்புகளின் கீழ் வெளியிடப்பட்ட தகவலில், 2023- 24 ம் கல்வியாண்டில் 56 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ.,, ஐ.சி.எஸ்.இ., மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு) படிக்கின்றனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 53 லட்சம் பேர் படிக்கின்றனர்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு என தனித்துவமான பாடத்திட்டம் உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் தான் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனக்கு வசதியாக, தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளை மாநில பாடத்திட்ட பள்ளிகளுடன் இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் 4,498 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 30 லட்சம் பேர் படித்து வருகின்றனர். இந்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் 8 ம் வகுப்பு வரை மும்மொழி பாடத்திட்டத்தை அனுமதிக்கின்றன.
-xacj6.jpg)
15.2 லட்சம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும், மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களும் 3 மொழிகளை படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் 50 சதவீத மாணவர்களுக்கு 3 மொழிகளை படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எஞ்சிய 50 சதவீத மாணவர்கள் இரு மொழிகளை படிக்கின்றனர். ஏன் இந்த பாசாங்குத்தனம்?
தி.மு.க.,வினர் நடத்தும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் அல்ல. விருப்பப்பாடம் தான். ஏன் இந்த இரட்டை வேடம்.
மாநில பாடத்திட்டம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு, சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு இருந்தால், தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் குழந்தைகள் ஏன் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.
தி.மு.க., அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு அப்பால் எழ வேண்டும். இது 1960 கள் அல்ல. மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப நமது கொள்கைகளும் உருவாக வேண்டும்.
உங்கள் குடும்பத்திற்கு என ஒரு கொள்கையையும், ஏழைகளுக்கு என இன்னொரு கொள்கையையும் நீங்கள் வைத்திருக்க முடியாது. உங்கள் பாசாங்கு தனத்தை தொடர்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம். சமகல்வி என்பது நமது உரிமை. என்று அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Equal education is our right Annamalai