மோடி அரசின் வரி பயங்கரவாதத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை..!!! - செல்வப் பெருந்தகை
Modi governments tax terrorism needs no more proof than this Selva Peruthakai
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் 'செல்வப்பெருந்தகை' தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,"கடந்த 11 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு வரிக்கு மேல் வரி பலமுனைகளில் விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

மக்களை நேரடியாக பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாள்தோறும் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. எந்த பொருளை வாங்கினாலும் ஜி.எஸ்.டி. வரியிலிருந்து தப்ப முடியாது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலையும் குறைவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைமுறையாக இருந்தது.
கச்சா எண்ணெய் 110 டாலராக இருந்தபோது மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆண்டுக்கு ரூ.2,00,000 கோடிக்கு மேல் மானியங்களை வழங்கி சுமையை ஏற்றுக் கொண்டது.ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு சமீபத்தில் ஏப்ரல் 8-ம் தேதி பெட்ரோல், டீசல் மீது லிட்டர் 1க்கு ரூ. 2 கலால் வரி விதித்திருக்கிறது.
இந்த கலால் வரி உயர்வினால் பெட்ரோல் விலை 1லிட்டர் ரூபாய் 11 முதல் 13 வரையிலும், 1லிட்டர் டீசல் ரூபாய் 8 முதல் 10 வரையும் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது 1 லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.19.90-ல் இருந்து ரூ. 21.90 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் 1லிட்டர் டீசல் கலால் வரி ரூ.15.80-ல் இருந்து ரூ.17.80 ஆக உயர்ந்திருக்கிறது.
அதேபோல, சமையல் எரிவாயு விலையும் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விலை உயர்வை நுகர்வோர் மீது திணிக்க மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. கலால் வரி உயர்வினால் மத்திய அரசின் வருமானம் பலமடங்கு கூடியிருக்கிறது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி விலகும்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.20 ஆக இருந்தது.
டீசல் மீதான கலால் வரி ரூ.3.46 ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு கலால் வரி உயர்வு பெட்ரோலுக்கு 357 %-மும், டீசலுக்கு 54 %-மும் அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி அரசின் வரி பயங்கரவாதத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. பெட்ரோல், டீசல் வரி உயர்வு மக்கள் பயன்பாட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
2014 மே மாதம் கச்சா எண்ணெய் 1பேரல் ரூ.9,265. இன்று ரூ.5,596 மட்டுமே. அதாவது, 2014-ம் ஆண்டை கணக்கிடும்போது கச்சா எண்ணெய் விலை 40% குறைந்துள்ளது. ஆனால், 2014-ல் டெல்லியில் பெட்ரோல் 1லிட்டர் ரூ.71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.55.49 ஆகவும் இருந்தது. இன்று அதே பெட்ரோல் விலை ரூ.94.77, 1லிட்டர் டீசல் ரூ.87.67 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 40 % குறைந்திருக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து சாமானிய மக்கள் பயனடைகிற வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது.
பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014-ல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து மத்திய அரசு தனது கஜானாவை நிரப்பியிருக்கிறது. இதைவிட அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Modi governments tax terrorism needs no more proof than this Selva Peruthakai