எதிர்க்கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்பதற்காக குற்றம் சாட்டுகின்றனர்- காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன்.!
EVKS Elangovan press meet after Erode by election vote
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே வேட்புமனு மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி சுமார் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இந்த இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தனது வீட்டின் அருகே உள்ள கச்சேரி சாலை வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி ஒரு முன்னோட்டமாக இருக்கும். எதிர்க்கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அவர்கள் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
EVKS Elangovan press meet after Erode by election vote