மீண்டும் சர்ச்சை.. திராவிட மாடல் என்று ஒன்று இல்லை.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டியால் பரபரப்பு..!!
Governor RN Ravi said that there is no Dravida model
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவி ஏற்ற பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்துத்துவா கருத்துக்களுக்கு ஆதரவாக பேசி வரும் இவர் பாஜகவின் கொள்கைகளை மக்களிடையே திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு ஆளுநரின் செயல்பாடுகள் இருந்துள்ளது.
இந்த நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் திராவிட மாடல் என்று ஒன்று கிடையாது என்றும், ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் என்ற முழக்கம் என பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் "திராவிட நாடு என்பது அரசியல் வாசகம் மட்டுமே. காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல். ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழுக்க எதிரானது தான் இந்த திராவிட மாடல் முழக்கம். சுதந்திரப் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடலின் நோக்கமாக இருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது எனப் பேச மறுத்தேன். தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகள், வாகனங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது. கள்ளக்குறிச்சி பள்ளியில் பசுக்களின் மடிகளை கலவரக்காரர்கள் வெட்டியுள்ளனர். சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடக்கவே இல்லை. தீட்சிதர்கள் மேல் அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. பள்ளி செல்லும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளது.
ஆளுநரின் நிதி குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது எல்லாமே பொய். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தில் தமிழ் & ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்கள் வாங்குகிறார்கள். வேறு மொழிகளில் ஏன் புத்தகம் வாங்கவில்லை? தமிழ்நாட்டில் கல்வியின் தரம் வெகுவாக குறைந்துள்ளதால் நம்மால் அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்க முடியவில்லை.
தமிழ்நாடு சட்டமன்ற பேச்சில் தவறான புள்ளி விவரங்களை, பொய்களை எழுதிக் கொடுத்து என்னைப் பேசச் சொன்னதால் மறுத்தேன்" என தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
English Summary
Governor RN Ravi said that there is no Dravida model