ராகுல்காந்தி காங்கிரசின் தலைவா் ஆவாரா? இந்த விவாதம் தேவையற்றது - கே. எஸ். அழகிரி!
K S Alagiri say about congress head posting issue aug
திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவா் கே. எஸ். அழகிரி, ராகுல்காந்தி காங்கிரசின் தலைவா் ஆவாரா, மாட்டாரா என்ற விவாதம் தேவையற்றது என்று தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு காஷ்மீா் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்குகிறாா்.
இதனையொட்டி, நேற்று திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கே. எஸ். அழகிரி தெரிவித்ததாவது,
"மக்களின் நல்லிணக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ராகுல்காந்தி நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளாா். பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி அதிகமாகியுள்ளது.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சியில் அரிசி ரூ. 2 க்கும், கோதுமை ரூ. 1 க்கும் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் பாஜக அரசு அரிசி, கோதுமைக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இதனை போன்றே ரயில் டிக்கெட்டுக்கும் ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கட்சியிலிருந்து வெளியேறும்போது அக்கட்சி குறித்து விஷத்தை கக்கிவிட்டுத்தான் செல்வாா்கள். இதனை போன்று தான் குலாம் நபி ஆசாத்தும். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்ற அவசியமில்லை. ராகுல்காந்தி காங்கிரஸின் தலைவா் ஆவாரா, மாட்டாரா என்ற விவாதம் தேவையற்றது.
சென்னைக்கு விமான நிலையம் அவசியம் தான். ஆனால் அது பரந்தூரில்தான் வர வேண்டும் என்று காங்கிரஸ் கூறவில்லை. தமிழக அரசு, நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்". என்று அவர் தெரிவித்தார்.
English Summary
K S Alagiri say about congress head posting issue aug