குண்டர் சட்டம் ரத்து! தவறிழைக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - உயர்நீதிமன்றம் அதிருப்தி!
Kallakurichi Illegal Liquor case goondas act Madras High Court
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்துக்கு தொடர்பான 18 பேர் மீது வைக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் நடந்தது.
மனுதாரர்கள் சார்பில், குண்டர் சட்டம் காலதாமதமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் தேவையான ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என வாதிடப்பட்டது. இதற்கு நீதிபதிகள், "ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் மீதான குண்டர் சட்டம் தொடர்வதற்கான தேவையென்ன?" என கேள்வி எழுப்பினர்.
மேலும், "கல்வராயன் மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. மது விலக்கு போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை; தவறிழைக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என கருத்து தெரிவித்தனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை, மாதவரத்தில் இருந்து வந்துள்ளது. விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதனையடுத்து, நீதிபதிகள் 18 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
English Summary
Kallakurichi Illegal Liquor case goondas act Madras High Court