"ரூ.1 கோடி இழப்பீடு வழங்குங்க"..அண்ணாமலைக்கு திமுக எம்.பி கனிமொழியும் நோட்டீஸ்..!!
Kanimozhi notice to Annamalai seeking Rs1 croes compensation
திமுக தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டார். Dmk files என்ற பெயரில் வெளியிட்ட அந்த சொத்து பட்டியலுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அண்ணாமலை தரப்பிலிருந்து வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அதேபோன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஆகியோர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திமுக சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனக்கு கலைஞர் டிவியில் பங்கு இல்லை எனவும், கலைஞர் டிவியில் ரூ.800 கோடிக்கு சொத்து இருப்பதாக அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கூறியுள்ள அவதூறு தொடர்பாக அவர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளதாகவும், தன்மீது கூறியுள்ள அவதூறு தொடர்பாக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவதூறு வீடியோவை நீக்க வேண்டும் எனவும், தன் மீது அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீஸில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
English Summary
Kanimozhi notice to Annamalai seeking Rs1 croes compensation