பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு.. ஆனால் பாஜகவுக்கு இல்லை..! - மாயாவதி அறிவிப்பு.!
Mayawati announced she support to common civil law
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் காரணமாக பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் தொற்றிக் கொண்டது.
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இத்தகைய அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பொது சிவில் சட்டத்தை நாடு தழுவிய அளவில் எதிர்ப்போம் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் வரும் ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் மத்திய பாஜக அரசு ஒரு சிவில் சட்டத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தால் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளும் ஆதரவளிக்க உள்ளன.
இந்த வரிசையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்க்கவில்லை, ஆனால் பொது சிவில் சட்டத்தை பாஜக திணிப்பதை எதிர்க்கிறோம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையாமல் தனித்து இருக்கும் மாயாவதி, பொது சிவில் சட்டம் தொடர்பான தமது நிலைப்பாட்டை விளக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "பொது சிவில் சட்டம் தேவை என்பதை ஆதரிக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. ஆனால் பொது சிவில் சட்டத்தை மத்திய பாஜக அரசு திணிப்பதை எதிர்க்கிறோம்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக் கூடிய மத்திய அரசின் அணுகுமுறையை எதிர்க்கிறோம். பாஜக அரசின் தோல்விகளை மறைக்க இத்தகைய பொது சிவில் சட்டம் போன்றவற்றை கையில் எடுத்துள்ளது. இதனை ஒருபோதும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி ஆதரிக்காது" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் பகுஜன் சமாஜ்வாதி கட்சி ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் வரிசையிலே பொது சிவில் சட்டத்திற்கான ஆதரவு பெருகி வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது.
English Summary
Mayawati announced she support to common civil law