திமுக யானை பலம் கொண்டது.. பாஜகவின் சலசலப்பு தமிழகத்தில் ஈடுபடாது.. மதுரையில் அமைச்சர் ஏ.வ வேலு பேச்சு..!!
Minister EVe velu said BJPs ruckus will not involve in TamilNadu
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் திமுக ஆட்சியின் சாதனை குறித்தான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் கலைஞர் திடலில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ வேலு, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ வேலு "திமுக அரசு யானை பலம் கொண்டது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி அடைகிறது. திமுக ஆட்சியின் போது தான் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை, வைகை ஆற்றில் குறுக்கு பாலம், ஆண்டாள்புரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம், திருப்பரங்குன்றம் சாலையில் மேயர் முத்துபாலம், மதுரை மாநகராட்சி கட்டிடம் அறிஞர் அண்ணா மாளிகை, மேலூர் சாலையில் ஒருங்கிணைந்த ஐகோர்ட்டு வளாகம் கட்டியது திமுக ஆட்சியில் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மட்டுமல்லாது தென்தமிழகமே பயன்படும் வகையில் ரூ.120 கோடியில் கலைஞர் நூலகம் அமைத்துள்ளார்.
திருமங்கலம் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முயற்சி தான் காரணம். மேலும் மேம்பாலம் கட்ட ரூ.33.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டிலேயே ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மக்கள் ஆதரிக்கும் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது. ஆனால் தமிழக ஆளுநர் ரவி விரும்புவது மனுதர்மம், மனுநீதி. தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைவரும் சமம் என்ற சமூக நீதியை விரும்புகிறார். தமிழ்நாட்டில் பாஜக இன்னும் வளரவில்லை. மத்தியில் ஆட்சியை வைத்துக்கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டும் பணியை செய்கின்றனர். பாஜகவின் சலசலப்பு தமிழகத்தில் எடுபடாது" என பேசி உள்ளார்.
English Summary
Minister EVe velu said BJPs ruckus will not involve in TamilNadu