டிவிட்டரில் வைரல், கேலிக்கூத்தான விவகாரம் - மநீம கண்டனம்!
MNM Condemn to kovai corporation
ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள்? அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் கேலிக்கூத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில் 2 பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கழிப்பறைக்கு கதவும் இல்லை. பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
ஏற்கெனவே, ஆழ்குழாய்க் கிணற்றின் அடிபம்பை அகற்றாமலேயே கான்கிரீட் தளம் அமைத்தது, இருசக்கர வாகனத்தின் டயர் சாலையில் புதையும்படி சிமென்ட் சாலை போட்டது போன்ற கோமாளித்தனங்களின் வரிசையில் இப்போது ஒரே அறையில் இரு கழிப்பறைகள். தொடரும் இந்த கேலிக்கூத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.
இதுபோன்ற நிகழ்வுகளை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது மட்டுமின்றி, அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மறு கட்டுமானத்துக்கான தொகையை அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வதே, இனியும் இதுபோல நேரிடாமல் தடுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கோவை மாநகராட்சி ஆணையர் அளித்துள்ள விளக்கத்தில், "கோயம்புத்தூர் மாநகராட்சி - வார்டு எண். 66 அம்மன்குளம் பகுதியில் இக்கழிப்பிடம் 1995 ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில். சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.
இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் சிறுவர்கள் உபயோகப்படுத்த இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்று மாநகராட்சி ஆணையாளர் (பொ) மரு.மோ.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Condemn to kovai corporation