தமிழக அரசு மீது மக்களுக்கு எரிச்சலும், எதிர்மறை உணர்வும்தான் உருவாகும் - மக்கள் நீதி மய்யம் அறிவுரை!
MNm Say About Aadhar EB Meter Connection
ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிட வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில், "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற முடிவை தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இதைச் செயல்படுத்துவதில் பொதுமக்களுக்கு குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு ஏராளமான பிரச்னைகள் எழுந்துள்ளன.
ஆதாரை இணைக்காமல் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலை வந்துவிட்டதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சில மாவட்டங்களில் மின்வாரிய அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கும் இந்த நடவடிக்கையானது பணிச்சுமையை அதிகரித்துள்ளது.
அரசாங்கம் புதியதொரு நிர்வாக சீர்திருத்தம் கொண்டுவரும்போது, மக்களுக்கு அலைச்சல் இல்லாத வகையில் பொறுமையாக அதனைச் செயல்படுத்தவேண்டும். இல்லையேல், இத்திட்டத்தின் மீது எரிச்சலும், எதிர்மறை உணர்வும்தான் உருவாகும். அது அரசின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
ஆகவே, ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்தமுடியும் என்ற தற்போதைய நிலையை ரத்து செய்து, ஆதாரை இணைக்காமல் பழையபடியே கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்படவேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு 3 மாத கால அவகாசம் கொடுத்து ஆதாரை இணைக்க எளிய வழிமுறைகளை மின்சார வாரியம் செய்துதரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. ஆதாரை இணைப்பதில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக மின்கட்டணம் செலுத்தத் தாமதமாகும் பட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்கப்படாது என்ற அறிவிப்பையும் தமிழக மின்சாரவாரியம் வெளியிடவேண்டும்" என்று செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
MNm Say About Aadhar EB Meter Connection