வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


வாழ்க்கையையே சவாலாகக் கொண்டு, வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான எளிதில் கடனுதவி, வங்கி, ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பான டிசம்பர் 3 இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு வங்கிகளில் தங்களின் உரிமை மறுக்கப்படுவது குறித்து எடுத்துரைத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தனர். 

சட்டத்தின் அடிப்படையில் பார்த்தாலும், மனிதாபிமான அடிப்படையிலும் பார்த்தாலும் மாற்றுத்திறனாளிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை. இத்தனை ஆண்டுகள், இந்த உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததே ஒரு சமூக அநீதியாகும்.

வங்கிகளை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகமுடியாத நிலை இருப்பதாகவும், கடனுதவி வழங்குவதில் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் தெரிவித்து, அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்ட நிகழ்வில், தன்னைத் தேடி வந்து கடனும், கடன் அட்டையும் கொடுத்த வங்கி, விபத்துக்குப் பின் மாற்றுத் திறனாளியான தன்னை தற்போது அலட்சியப்படுத்துவதாக ஒரு மாற்றுத்திறனாளி வேதனையுடன் தெரிவித்தது மிகுந்த கவலையளிக்கிறது.

பல்லாயிரம் கோடியைக் கட்டாமல் ஏமாற்றும் பெருமுதலாளிகள், கார்ப்பரேட்டுகள் மத்தியில், வங்கிக் கடனை உரிய தவணையில் செலுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் கொடுப்பதில் அலட்சியத்துடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்காமல், உரிய காலத்தில் கடனுதவி வழங்க வேண்டும்.

அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தளப் பாதை அமைக்க வேண்டும். அதேபோல, மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஏடிஎம் கார்டு, வங்கிகளின் கண்காணிப்புக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம், குரல்வழி வங்கிச் சேவை, வங்கிகளில் பிரெய்லி ஆவணங்கள் வசதி, வங்கியின் வாடிக்கையாளர் சேவை இயந்திரங்களில் தொட்டு உணரும் பொத்தான் வசதி என அவர்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உதவுவதில் வங்கிகள் மெத்தனம் காட்டக்கூடாது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளை ஏளனத்துடனும், அலட்சியப் போக்குடனும் கையாளும் போக்கை வங்கிகள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். வாழ்வாதாரத்துக்காகப் போராடும் மாற்றுத் திறனாளிகளை, உரிமைக்காகவும் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM SAY ABOUT BANK JOB ISSUE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->