கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கடும் சீற்றத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் - மநீம.!
MNM Say About Cotton issue May 2022
வரலாறு காணாத வகையில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்ந்துள்ளதால், தமிழக ஜவுளித் துறை கடும் இன்னலை சந்தித்து வருகிறது. பஞ்சு இறக்குமதி, பதுக்கலை தடுத்தல் உள்ளிட்டவை மூலம், மூழ்கத் தொடங்கியுள்ள ஜவுளித் தொழில் துறையை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டுமென தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர் என்று, மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் R.தங்கவேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பைத் தருகிறது ஜவுளித் துறை. நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கானோர் இத்தொழிலை நம்பியுள்ளனர்.
இந்நிலையில், மூலப் பொருளான நூலின் விலை கடந்த சில மாதங்களாகவே அபரிதமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்த மாதம் மட்டும் கிலோ ரூ.40 வரை விலை உயர்ந்து, ரூ.470-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல, அதிர்ச்சி தரும் வகையில் பருத்தி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நூல் விலை இன்னும் உயருமோ என்று ஜவுளித் துறையினர் அஞ்சியுள்ளனர்.
பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்து செய்துவிட்டு, உள்நாட்டுத் தேவைக்குப் போதுமான நூல் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தியைப் பதுக்கிவைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவுளித் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நூல் விலை உயர்வால், கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் உள்ள பின்னலாடை மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடும் இன்னலைச் சந்தித்துள்ளன. நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை மத்திய அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.ஒரே நாளில் ரூ.300 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேநிலை தொடர்ந்தால், பல்லாயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகும். பின்னலாடைத் தொழில் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணியையும் இழக்க நேரிடும்.
எனவே, பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் பருத்தியை இடம்பெறச் செய்வதுடன், பதுக்கல்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எல்லா விவகாரங்களைப்போல நூல் விலையைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு அலட்சியம் காட்டினால், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கடும் சீற்றத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் எச்சரிக்க விரும்புகிறது"
இவ்வாறு அந்த அறிக்கையில் R.தங்கவேலு தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Say About Cotton issue May 2022