தமிழக முதல்வர் உடனே தலையிட வேண்டும் - ஓபிஎஸ் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ இடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மாணவ‌ மாணவிகளுக்கு தகுதியின் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலும் மருத்துவ இருக்கைகள் கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுதிர்த்துள்ள அறிக்கையில், "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, இந்தியாவிலேயே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிகம் கொண்ட மாநிலமாக, மருத்துவ இருக்கைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக் கல்லூரிகளில் 11.4 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இத்தகைய பெருமைக்கு முழு முதற் காரணம் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னால் அது மிகையாகாது. 

தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேற்படி மருத்துவ இடங்களில், தற்போதுள்ள விதியின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மொத்த மருத்துவ இடங்களில் 15 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும். 

மீதமுள்ள 85 விழுக்காடு இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு உரியதாகும். இந்த 85 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் படித்த மாணவ, மாணவியர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தகுதியின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில் மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

நடப்பாண்டில், 772 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு வழங்கியுள்ளதாகவும், முதல் சுற்றின் முடிவில், மேற்காணும் 772 இடங்களில் 669 இடங்கள் காலியாக உள்ளதாகவும், இதற்குக் காரணம், பெரும்பாலான மாணவ, மாணவியர் மத்திய அரசின் ஒதுக்கீட்டை புறந்தள்ளிவிட்டு, மாநில அரசின் ஒதுக்கீட்டில் சேர்கிறார்கள் என்றும், பெரும்பாலானோர் மத்திய அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிப்பதில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை குறையவும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பயிலவும் வாய்ப்பு உருவாகும்.

உதாரணமாக, தகுதியின் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலமும், மாநில ஒதுக்கீட்டின் மூலமும் இடம் கிடைக்கின்றபோது, மாநில ஒதுக்கீட்டின் மூலம் சேருவதை அந்த மாணவர் தேர்ந்தெடுக்கிறார். 

இதேபோன்று, ஒரு மாணவருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மத்திய ஒதுக்கீட்டின் மூலம் இடம் கிடைக்கிறது. ஆனால், அவருடைய விருப்பமோ சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதுதான். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அந்த மாணவர் மாநில ஒதுக்கீட்டின் மூலம் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேருகிறார். 

இதன் காரணமாக, மத்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில், தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அதிகம் இடம் பெறுவதை உறுதி செய்வது தான் தமிழ்நாடு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். 

இதுபோன்ற நடவடிக்கையை முதல் சுற்று கலந்தாய்வில் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை வெகுவாகக் குறையக்கூடும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவம் பயில விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்கி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அகில இந்திய ஒதுக்கீட்டின்மூலமும் அதிக மருத்துவ இடங்களைப் பெற வழிவகை செய்ய வேண்டும்" என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS Request to CM Stalin MBBS Seat issue 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->