கலவர பூமியாக மாறும் தமிழ்நாடு! ஸ்டாலினை எச்சரிக்கும் ஓ பன்னீர்செல்வம்! - Seithipunal
Seithipunal


கள்ளச் சாராயம், போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கட்டுப்படுத்தாத தமிழக அரசிற்கு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "புரட்சித் தலைவி அம்மா ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாடு, தொழில் துறையின் மையமாக விளங்கிய தமிழ்நாடு, மருத்துவக் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு, சுகாதார மையமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக, கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் புழங்கும் மாநிலமாக, கள்ளச் சாராயம் பெருக்கெடுத்தோடும் மாநிலமாக, கொலைகளும், கொள்ளைகளும் அதிகம் நடக்கும் மாநிலமாக. கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது அனைத்துத் தரப்பினரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை, ஓரமுள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக திருவாளர்கள் சங்கர், தரணிவேல் மற்றும் சுரேஷ் ஆகியோர் மயக்கமுற்று புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, எக்கியார்குப்பம் மீனவப் பகுதியைச் சேர்ந்த திரு. சுப்பராயன் என்பவர் கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்தார் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், காவல் துறையினர் இது குறித்து அப்பொழுதே தீவிர விசாரணை நடத்தி, கள்ளச் சாராயம் விற்பவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று மூன்று பேர் உயிரிழந்து இருக்க மாட்டார்கள். 

ஆனால், தி.மு.க. அரசின் அக்கறையின்மை காரணமாக, நிர்வாகத் திறமையின்மை காரணமாக மூன்று பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளச் சாராயம் ஒருபுறம் என்றால், மறுபுறம் போதைப் பொருள் நடமாட்டமும், பாலியல் பலாத்காரமும் தலைவிரித்து ஆடுகிறது. பத்திரிகையைத் திறந்தாலே பாலியல் துன்புறுத்தல்கள் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகி கொண்டே போகிறது. அபின், சில்வர், கேட்டமைள் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை சென்னை மற்றும் புறநகரில் அமோகமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போதைப் பொருட்கள், போதையின் கால அளவீடுகளின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஊசி வாயிலாக போதைப் பொருட்கள் ஏற்றப்படுவதாகவும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள்தான் என்றும் கூறப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் நாளை இந்தியக் குடியரசின் மன்னர்கள். 

அவர்களிடம் கல்வியும், உயர்ந்த குறிக்கோள்களும் இருக்க வேண்டும். ஆனால், இந்தத் 'திராவிட மாடல்' ஆட்சியில் கள்ளச் சாராயமும், போதைப் பொருட்களும் அவர்களிடம் இருப்பது என்பது மிகுந்த வேதனைக்குரியது. இதன் வாயிலாக, தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் கள்ளச் சாராய கலாச்சாரம், போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை அடியோடு அகற்றுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Warn To CM STAlin for LAW and ORDER kallasarayam death issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->