நில அபகரிப்பு வழக்கு.!! ஜெயக்குமாருக்கு எதிரான மனு தள்ளுபடி..!!
Petition against Jayakumar dismissed by court
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரியும், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என மகேஷ் தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மகேசுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2016ம் ஆண்டில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதியபட்டுள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் உள்ளதால் மான நஷ்ட ஈடுக்கோரி தான் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மகேஷ் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2016ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் மீது புகார் அளிக்க இயலவில்லை என்பதால் கடந்த ஆண்டு புகார் அளித்தாகவும், செய்தி ஊடகங்களுக்கு ஜெயக்குமார் தான் பேட்டி அளித்து வருவதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மகேஷின் நிராகரிப்பு மனு மீதான உத்தரவை இன்று நீதிபதி வழங்கி உள்ளார்.
அதன்படி ஜெயக்குமார் வழக்கிற்கு எதிரான மகேஷின் நிராகரிப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம், மகேஷுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
English Summary
Petition against Jayakumar dismissed by court