சாத்தனூர் அணை விவகாரம்: வசமாக சிக்கிய தமிழக அரசு! அன்புமணி கேட்ட 7 கேள்விகள்! - Seithipunal
Seithipunal


சாத்தனூர் அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்குபாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில்,

1. தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள விவரங்களின்படி சாத்தனூர் அணையின்  நீர்மட்டம் 119 அடி. அதன் கொள்ளளவு  7.32 டி.எம்.சி.   30.11.2024-ஆம் நாள் காலை நிலவரப்படி  அணையின் நீர்மட்டம் 117.55 அடி.  அதாவது அணை நிரம்புவதற்கு ஒன்றரை அடி நீர்மட்டமும், ஒரு டி.எம்.சிக்கும்  குறைவான தண்ணீர் வந்தாலே அணை நிரம்பி பேரழிவு ஏற்பட்டிருக்கும்.

வினாடிக்கு 11,500 கன அடி வீதம் தண்ணீர் வந்தாலே, அதிகபட்சமாக அடுத்த 24 மணி நேரத்தில் அணை நிரம்பியிருக்கும். அத்தகைய சூழலில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  மொத்தமாக 170 செ.மீ மழை பெய்த நிலையில் பெரு வெள்ளம் ஏற்படும் என்பதை உணர்ந்து அணையிலிருந்து மக்களை பாதிக்காத வகையில்  வினாடிக்கு சராசரியாக 50 ஆயிரம் கன அடி வரை தண்ணீரைத் திறந்து அணையின் நீர்மட்டத்தைக் குறைத்திருக்க வேண்டுமா, இல்லையா? இதை தமிழக அரசு செய்யாதது ஏன்?

2. 01.12.2024 அன்று மாலை. 6.00 மணியளவில் 19500 கன அடி,  7.00 மணியளவில் 25600 கன அடி, 8.00 மணியளவில் 31555 கன அடி, 9.00 மணியளவில் 32000 கன அடி, 10.00 மணியளவில் 32000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டு இருந்ததாக தமிழக அரசு கூறியிருக்கிறது.  

ஆனால், அன்று காலை 8.00 மணிக்கு இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுமா? வினாடிக்கு 15,000 கன அடி.  அணை நிரம்பி வழியும் தருவாயில் இருக்கும் போது,  அணைக்கு வரும் 31,555 கன அடி நீரில்  பாதிக்கும் குறைவான தண்ணீரை மட்டும் வெளியேற்றியது சரியா? 

3. 1.12.2024-ஆம் நாள் காலை  11.50 மணிக்கு மூன்றாவது எச்சரிக்கை வெளியிடப்பட்டு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு  வினாடிக்கு 20,000 கன அடி. ஆனால், அந்த நேரத்தில் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவு 32,000 அடி.  அணை நிரம்பும் நிலையில் இருக்கிறது;

கடுமையான மழை பெய்யும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில் அணையின் நீர்மட்டத்தை குறைப்பது  புத்திசாலித்தனமா அல்லது வரும் நீரை விட குறைந்த நீரை வெளியேற்றி நீர்மட்டத்தை அதிகரிப்பது புத்திசாலித்தனமா?

4.1.12.2024 இரவு 10 மணிக்கு நான்காவது வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அப்போது அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 30,000 கன அடி.  அடுத்த இரு மணி நேரத்தில் அணைக்கு வந்த  நீரின் அளவு 62,000 கன அடியாகவும்,  நள்ளிரவு 1.00 மணிக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கன அடியாகவும்,  அதிகாலை 2.00 மணிக்கு 1.30 லட்சம் கன அடியாகவும் உயர்ந்ததாகவும்,  அந்த நீர் அப்படியே திறக்கப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது.

ஆனால், கூடுதல் நீர் திறக்கப்பட்டது குறித்து  புதிய எச்சரிக்கை  எதுவும் வெளியிடப்படவில்லை. வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி  தண்ணீர் திறக்கப்படும் என்று கூறி விட்டு,  1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால்  அதை எதிர்கொள்ள மக்கள் எவ்வாறு தயாராவார்கள்?

5. இறுதியாக 2.12.2024 அதிகாலை 2.45 மணிக்கு ஐந்தாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. ஐந்தாவது அபாய எச்சரிக்கை அதிகாலை 2.45 மணிக்கு விடப்பட்டதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் என்பதை தி இந்து தமிழ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

‘’அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணியளவில் ஊடகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு, நீர்வளத் துறை எச்சரிக்கை சென்றடையவில்லை. எச்சரிக்கை விடுக்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே, அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர். உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை.  

வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன” என்று  தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் பொய் பேச வேண்டிய தேவையில்லை. அரசு தான் பொய் பேசுகிறது.

6. ஒருவேளை  2.12.2024 அதிகாலை 2.45 மணிக்கு ஐந்தாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாகவே வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் விடப்படும் எச்சரிக்கை எவ்வாறு உறக்கத்தில்  மக்களை சென்றடையும்  என்ற சிந்தனை தமிழக அரசுக்கு இருக்க வேண்டாமா?

7. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் பேரழிவு ஏற்பட்டதற்கு காரணம், ஏரிக்கு  தண்ணீர் வர வர திறக்காமல், அனைத்தையும் சேர்த்து வைத்து மொத்தமாக திறந்தது தான். அதே தவறைத் தான் சாத்தனூர் அணைத் திறப்பு விவகாரத்தில் திமுக அரசும் செய்திருக்கிறது.  ஆனால், தங்களின் தவறை உணராமல் சாதுர்யமாக தமிழக அரசு பாராட்டிக் கொள்கிறது. 

சாத்தனூர் அணையில் இருந்து நள்ளிரவில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால், 4 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சார்பில் எழுப்பப்படும் இந்த வினாக்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Sathanur dam DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->