கனடாவின் புதிய நீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்புமணி இராமதாஸின் நண்பர்!
PMK Anbumani Ramadoss Say About Canada Law Minister
கனடாவின் புதிய நீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கேரி ஆனந்தசங்கரி மனித உரிமைகளுக்காக தொடர்ந்துபோராட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "கனடாவில் பிரதமர் மார்க் கேர்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சராகவும், கனடாவின் தலைமை வழக்கறிஞராகவும் பொறுப்பேற்றுள்ள எனது நண்பரும், ஈழத்தமிழருமான கேரி ஆனந்தசங்கரிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனடாவில் கடந்த காலங்களில் தமிழர்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழர் ஒருவர் அந்த நாட்டின் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை ஆகும். கனடாவின் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆனந்த சங்கரி அந்தப் பதவிக்கு மிகவும் பொறுப்பானவர் ஆவார்.
ஆனந்தசங்கரி 15 ஆண்டுகளுக்கும் மேலாக எனது நண்பர் ஆவார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக மருத்துவர் அய்யா அவர்களாக நிறுவப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியவர்.
பசுமைத்தாயகத்தில் சார்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் நான் பங்கேற்று உரையாற்றிய போது, அந்த அமர்வுகளில் ஆனந்த சங்கரியும் பங்கேற்று எனது முயற்சிகளையும், பசுமைத் தாயகம் அமைப்பின் நடவடிக்கைகளையும் பாராட்டியவர். மருத்துவர் அய்யா மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
கனடாவின் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு என்னுடன் தொலைபேசி மூலம் ஆனந்தசங்கரி உரையாடினார். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட நான், ஏற்றுக் கொண்ட பொறுப்பில் சாதனை படைக்கும்படியும், இலங்கை இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக தொடர்ந்து பாடுபடும்படியும் கேட்டுக் கொண்டேன். அதற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Say About Canada Law Minister