விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க-விற்கே உண்மையான வெற்றி - டாக்டர் இராமதாஸ் மனமார்ந்த நன்றி! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி கிடைத்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 56,261 வாக்குகள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ம.க. தலைவணங்கி ஏற்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை தொடங்கி விட்டது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125-க்கும் கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வெள்ளமாக பாயவிட்டனர். ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி - சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். 

நிறைவாக ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது. அந்த வகையில் திமுகவின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி - சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி. 

இவை அனைத்துக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவின் தொண்டர் அணியினராகவே மாறி, திமுகவின் தேர்தல் விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தது மட்டுமின்றி, அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை நின்றார்கள். 

அந்த வகையில் இது திமுகவும், தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. மறுபுறத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர். 

அதைக் கூட தடுக்கும் வகையில் மக்களை அழைத்துச் சென்று பட்டிகளில் அடைத்து வைத்தனர். இத்தனை அடக்குமுறைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 56,255 வாக்குகளை குவித்திருக்கிறார். இது 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு கிடைத்த 32,198 வாக்குகளை விட 75 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பா.ம.க.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 

2026 தேர்தலில் பா.ம.க. மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 56,261 வாக்குகள் பெற்ற பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணி ஆற்றிய பா.ம.க மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss say About Vikravandi By Election Result


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->