தமிழ்நாட்டை பாட்டாளி ஆள வேண்டும்.! சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பாமக.! - Seithipunal
Seithipunal


'2021-க்கு விடை கொடுப்போம்! 2022-ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது. 

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் தீர்மானமாக, 2026-ஆம் ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்: மருத்துவர் அய்யா அவர்கள் காட்டும் வழியில் மக்கள் பணியாற்றி, பா.ம.க.வை வலுப்படுத்துவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், "தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. மொத்தம் 23 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் உழைப்பு, மக்களின் நலனுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியால் அதிக இடங்களில் வெற்றி பெற முடிய வில்லை என்றாலும் கூட, மக்கள் நலனுக்கான அதன் பணிகள் எந்த வகையிலும் குறையவில்லை. ஓர் ஆக்கப்பூர்வ அரசியல் கட்சிக்குரிய இலக்கணத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுதல் (Criticize), மாநில வளர்ச்சிக்காக புதிய யோசனைகளை வழங்குதல் (Creative), ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுதல் (Constructive) ஆகிய மூன்று  ‘சி’&க்களை கடைபிடித்து பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வழி நடத்திச் செல்கிறார். அந்த வகையில் தமிழ்நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ம.க. திகழ்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் நலன்கள், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது அதற்கான முதல் குரல் மருத்துவர் அய்யா அவர்களிடமிருந்து தான் எழுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் ஆகியவை சார்ந்த பிரச்சினைகளில் மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவிக்கும் யோசனைகள் தமிழக அரசால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மருத்துவர் அய்யா அவர்களின் பல யோசனைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பா.ம.கவின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.

அதே நேரத்தில் ஓர் அரசியல் கட்சியாக, பாட்டாளி மக்கள் கட்சி, அதன் செயல்பாடுகள் குறித்து இத்துடன் மனநிறைவு கொள்ள முடியாது. ஜனநாயகத்திலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அதன் இலக்கு ஆட்சியைப் பிடிப்பதாகத் தான் இருக்கும்; இருக்க வேண்டும். மக்களின் நலனுக்கான திட்டங்களை ஆட்சியாளர்களுக்கு யோசனையாக முன்வைத்து செயல்படுத்துவதை விட, அவற்றை நேரடியாகவே செயல்படுத்தும் இடத்தில் இருப்பதும், ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியாக இருப்பதை விட, தவறுகளே செய்யாத சிறந்த ஆட்சியை வழங்கும் இடத்தில் இருப்பதும் தான் ஓர் அரசியல் கட்சியின் உன்னத நோக்கமாக இருக்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமும் அது தான்; அதைத் தவிர வேறொன்றுமில்லை.

அந்த இலக்கை அடையும் எண்ணத்துடன் தான் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்  தனது தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிடும் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்தது. அத்துடன் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுவதற்கான வலுவான அடித்தளத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி அமைத்தது. 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்  தேர்தலிலும் அதே நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்திருந்தால் அதன் வெற்றிவாய்ப்பு விகிதம் அதிகரித்து இருக்கலாம். ஆனால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். அப்படி ஒரு முடிவை எடுத்ததில் எந்தத் தவறும் இருப்பதாக பா.ம.க. கருதவில்லை.

2021 தேர்தல் நிறைவடைந்து விட்ட சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நமது நோக்கத்தை வென்றெடுப்பதற்கான அரசியல் பயணத்தை நாம் தொடங்கியாக வேண்டும். அதைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் அடுத்தடுத்து தெரிவித்து வருகிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது சற்று கடினமான இலக்கு தான்; ஆனால் சாத்தியமாகாத இலக்கு அல்ல. அனைத்து பாட்டாளிகளும் கடுமையாக உழைத்தால் அந்த இலக்கை நம்மால் நிச்சயமாக எட்ட முடியும்.

தமிழக அரசியலின் பிதாமகர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அவரது சொல் தான் பாட்டாளிகளுக்கு வேதம். தமிழ்நாட்டின் நலனையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் அய்யா அவர்கள் எந்த முடிவையும் எடுப்பார். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் முன்னேற்றம் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியம். அந்த லட்சியங்களை வென்றெடுத்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காக பா.ம.க. தலைமையில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகத் தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ம.க. தலைமையில் தனி அணி அமைக்க வேண்டுமென மருத்துவர் அய்யா அவர்கள் விரும்புகிறார்.

தமிழ்நாட்டை பாட்டாளி ஆள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை எட்டுவதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் காட்டும் வழியில் பயணிக்க வேண்டும்; மக்களை மீண்டும், மீண்டும் சந்தித்து அவர்களின் ஆதரவை வென்றெடுப்பது; பாட்டாளி மக்கள் கட்சியை அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பா.ம.க. பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK General Committee meet dec


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->