ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று, இன்று பாமக சார்பில் சென்னையில் அறப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது,
"தமிழகத்தில் அடுத்த தலைமுறையை சீரழிக்க மூன்று பெரிய பிரச்சினைகள் உள்ளது. மது கடை, போதை பழக்கத்திற்கு அடிமையாகக்கூடிய பிரச்சனை, ஆன்லைன் சூதாட்டம். இந்த மூன்று பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்ற வகையில், தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது.
மதுவை எதிர்த்து நாற்பத்தி மூன்று ஆண்டுகள் மருத்துவர் அய்யா தலைமையில் போராடி வருகின்றோம். போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று, கடந்த 15 ஆண்டு காலமாக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம். இந்த ஆன்லைன் சூதாட்டம் அதிக அளவில் இளைஞர்களை பாதிக்கக்கூடிய ஒரு சாபக்கேடு, இதை தடை செய்ய வேண்டும் என்று மருத்துவர் அய்யா, பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 7 ஆண்டு காலமாக போராட்டம் செய்து வருகிறது.
அந்த அடிப்படையில்தான், தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று, முதல்கட்ட ஆர்பாட்டம் என் தலைமையில் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
மருத்துவர் அய்யா அவர்கள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இடம் தொலைபேசியில் பேசி வலியுறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தார். அந்த சட்டம் முழுமையாக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஆகஸ்ட் மாதம், மூன்றாம் தேதி, 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை தடை செய்தது.
அதற்கான காரணம் அந்த சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கிறது. மீண்டும் தமிழக அரசு அந்த ஓட்டைகளை சரி செய்து புதிய சட்டத்தை கொண்டு வரலாம். கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்த அந்த ஆணையில் உள்ளது. இப்போது விலை மதிக்க முடியாத உயிர்கள், பிஞ்சு உயிர்கள், குடும்பத் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் அத்தனைபேரும் இதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் வருவதற்கு முன்பாக கிட்டத்தட்ட 60 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளார்கள்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதித்து சட்டம் இருந்த காலகட்டத்தில் ஒரே ஒரு தற்கொலை கூட தமிழகத்தில் நடைபெறவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தால் இந்த 'ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்' தடை செய்யப்பட்டது முதல் இன்று வரை நமக்குத் தெரிந்து 23 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து இருக்கிறார்கள். நமக்கு தெரியாமல் எத்தனை உயிர்கள் போனதோ? ஆனால், இவ்வளவு காலமாக தமிழக அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை தடை செய்தது. ஆகஸ்ட் 4ஆம் தேதி கடுமையான ஒரு அறிக்கையை மருத்துவர் அய்யா வெளியிட்டுள்ளார். பிறகு அன்று மாலை தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் நிச்சயமாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்து, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வோம் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் இரண்டு வாரத்திற்கு பிறகு அவர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கின்றோம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த இடைக்கால இரண்டு வாரத்தில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியாது.
உச்ச நீதிமன்றம் சென்றால் தற்போது உள்ள சட்டத்தை வைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றம் சென்றபோதும், அந்த தடை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டுக்கும் அதே நிலைதான் இருக்கும்.
ஆனால், எந்த காரணத்திற்காக நாங்கள் உடனடியாக தடை செய்வோம் என்று சொன்ன அமைச்சர், பிறகு நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று மாற்றி பேசினார் என்பது தெரியவில்லை. மேலுமுறையீடு செய்து 10 மாதம் ஆகிவிட்டது. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அன்றாடம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அண்மையில் பவானி என்ற ஒரு பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த பெண், 20 சவரன் நகையை வைத்து கடன் வாங்கி ஆன்லைனில் சொட்டும் ஆடியுள்ளார். மொத்தத்தையும் இழந்து தற்கொலை செய்துகொண்டார் அந்த பெண்.
மணிகண்டன் என்ற ஒரு நபர், ஒரு பன்னாட்டு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர். ஒரு வருடத்திற்கு அவருக்கு 27 லட்சம் ரூபாய் ஊதியமாக கிடைத்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட கடன் வாங்கி., வாங்கி., கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். பின்னர் அதனை அவரால் திரும்பி தர முடியாததால், அவர் குடும்பத்தை கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இது எவ்வளவு பெரிய கொடுமை. இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் தலைவரின் உறவினர், மிக வசதியான ஒருவர், நான்கு கோடி ரூபாய் சொத்து உள்ளவர், ஒரே ஒரு பையன் மட்டும் தான், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கு தெரியவில்லை இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி, விளையாடி கடனை வாங்கி அவமானம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
நினைத்துப் பாருங்கள். அனைத்து குடும்பத்தையும், ஏழை -நடுத்தர -பணக்கார எல்லா வர்க்கத்தையும் தாக்குகின்ற இந்த கொடூரமான ஆன்லைன் சூதாட்ட அரக்கனை உடனடியாக தடை செய்திருக்க வேண்டுமா இல்லையா? ஏன் இந்த தாமதம்? என்ன காரணம்? அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானமா?
கடந்த ஆண்டே இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் மொத்த வருமானம் என்று பார்த்தால், மத்திய -மாநில அரசுகளுக்கு 10 ஆயிரத்து 100 கோடி ரூபாய். அதில் ஜிஎஸ்டி மட்டும் 28 சதவீதம், வரி கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் தமிழகத்துக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று சொல்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் அது 40 ஆயிரம் கோடியாக உயரும் என்று சொல்கிறார்கள். 40 ஆயிரம் கோடி ரூபாய் யாருடைய பணம். சாதாரண ஒரு சாமானிய மக்களின் பணம்.
இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் 10,000 ரூபாய் நாங்கள் இலவசமாக தருகிறோம், 20 ஆயிரம் ரூபாய் உங்களுடைய அக்கௌண்டில் நாங்கள் செலுத்தி விடுவோம் நீங்கள் ரம்மி ஆடுங்கள் என்று ஆசை காட்டுவார்கள். தற்போதைய பொருளாதார நிலை காரணமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலே அவனவன் சூதாட்டம் ஆட ஆரம்பித்து விடுவான். நாங்கள் உங்கள் கையில் பத்தாயிரம் தருகிறோம் என்று நீங்கள் சூதாட்டம் ஆடுங்கள் என்று சொன்னால் யார் தான் ஆட மாட்டார்கள்.
ஆனால் இவர்களுக்குத் தெரியாது, இவர்கள் ஆடுவது இன்னொரு மனிதர்களுக்கு எதிராக அல்ல, அங்கு இருப்பதோ கணினி தான் என்று. முதலில் உங்களுக்கு 10,000 கொடுப்பார்கள், அடுத்து 20,000 கொடுப்பார்கள், 30 ஆயிரம் கொடுப்பார்கள். ஆசைகாட்டி பின்னர் உங்களிடம் இருக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி நீங்கள் விட்டதை பிடிப்பேன்., விட்டதை பிடிப்பான்., என்று மொத்தத்தையும் தொலைத்து இறுதியில் தற்கொலையில் தான் நீக்க வேண்டும்.
இப்போது இருக்கக்கூடிய சட்டம் என்பது 1867ல் போடப்பட்ட சட்டம். இன்னும் அந்த சட்டத்தை வைத்து தான் இவர்கள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சட்டத்தில் திறன் சார்ந்த விளையாட்டு, அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு என்று எல்லாம் இருக்கிறது. அதுதான் இப்போது பிரச்சனையே. உயர்நீதிமன்ற சொன்ன காரணம் என்னவென்றால், இது திறன் சார்ந்த விளையாட்டு என்று சொல்கிறது. ஏனென்றால் இந்த சட்டத்தில் அப்படி உள்ளது.
ஆனால் உண்மையிலேயே அது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு தான். அது திறன் சார்ந்த விளையாட்டு அல்ல என்று அந்த சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அன்றைக்கே கொண்டு வந்திருக்க வேண்டும். இது மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் நடக்கின்ற விளையாட்டு கிடையாது. இது மனிதனுக்கும் கணினிக்கும் இடையே நடக்கக்கூடிய விளையாட்டு. இதுபோன்ற தரவுகளை வைத்து புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, இது திறன் சார்ந்த விளையாட்டு அல்ல, இது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு, இது சூதாட்டம் என்று தெளிவாக சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, மீண்டும் ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்து இருந்தால், நிச்சயமாக உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை பாதுகாக்கும்.
இருபத்தி மூன்று உயிர்கள், விலை மதிக்க முடியாத உயிர்கள் இருபத்திமூன்று குடும்பங்கள், நமக்கு தெரியாமல் எத்தனையோ பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 3 நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுவன் அவர் தாயை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார். இந்த ஆன்லைன் விளையாட்டை விளையாட அவர் தாய் 10 ஆயிரம் ரூபாய் பணம் தரவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே. மேலும் தனது தாயின் பிணத்தை இரண்டு நாள் மறைத்து வைத்துள்ளார் அந்த சிறுவன், அவரின் தங்கைக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இப்படியெல்லாம் கொடூரமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான். இது எங்களுடைய கடமை, அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அந்த அடிப்படையில்தான் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இந்த மேடைக்கு நான் வந்தவுடன் தமிழக அரசு ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. என்ன செய்தி என்றால், 'தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல தற்கொலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் ஐவர் குழுவை அமைத்து, இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய என்னென்ன தரவுகள் இருக்கிறதோ? அதனை சேகரித்து தமிழக அரசுக்கு 2 வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வருவார்கள் என்றும், இதையெல்லாம் பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்' என்றும் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதை நாங்கள் வரவேற்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சியை வரவேற்கிறது. இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், இதனை நீங்கள் கடந்த ஆண்டே தடை செய்திருக்க வேண்டும். இருபத்தி மூன்று உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இரண்டு வாரம் கூட தாமதிக்க வேண்டாம். இரண்டு நாட்கள் போதும், இந்த ஐவர் குழு, நீதியரசர் சந்துரு அவர்கள் உடனடியாக தரவுகளை சேகரித்து அரசிடம் கொடுத்து, அவசர சட்டத்தை கொண்டு வந்து, தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை, குடும்பங்களை காப்பாற்றுங்கள். தமிழக அரசே காப்பாற்றுங்கள். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ஆக்கபூர்வமான கட்சி. உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான். வேண்டும் என்றே நாங்கள் எதையும் எதிர்க்க மாட்டோம். மக்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிராக எதுவென்றாலும் லாட்டரி சீட்டு, போதை பழக்கம், ஆன்லைன் சூதாட்டம், மது எதுவாக இருந்தாலும் சரி, மக்களுக்கு எதிரானது அத்தனையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம், அதற்கு தீர்வு திரும்ப வரும் வரை நாங்கள் எதிர்ப்போம், நாங்கள் தேர்தல் அரசியல் செய்யவில்லை, இதனை நாங்கள் உணர்வுபூர்வமாக செய்து வருகிறோம். மக்களின் நலன் தான் எங்களுக்கு வேண்டும். அதனால் இதையெல்லாம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் பேசினார்.