சத்தமே இல்லாமல் மத்திய அரசு போட்ட சதித்திட்டம்?! - முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to Central Govt College Entrance Exam
கல்லூரிகளில் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம், 12ம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைப் படித்திருந்தாலும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் கல்லூரியில் விரும்பியப் பாடப் பிரிவில் சேரலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டிருக்கிறது.
இந்த யோசனைகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, இதன் பின்னணியில் நுழைவுத் தேர்வைத் திணிக்கும் திட்டம் தான் முதன்மையாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, அது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை அறிவதற்காக வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு சம்பந்தப் பட்டவர்கள் வரும் 23ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
12ம் வகுப்பில் ஒருவர் எந்த பாடப்பிரிவைப் படித்தாலும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்லூரியில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும்; பட்டப்படிப்பு படிப்பதற்கான கால அளவை மாணவர்களே குறைத்துக் கொள்ளவும், நீட்டித்துக் கொள்ளவும் முடியும் என்பதை தான் பல்கலைக்கழக மானியக்குழு மக்கள் முன் வைத்திருக்கும் புதிய யோசனைகளாகும்.
12ம் வகுப்பில் ஒரு பாடப்பிரிவை படித்தவர்கள் பட்டப்படிப்பில் வேறு பாடத்தை படிக்க வேண்டும் என்றால், அதற்கு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் 12ம் வகுப்பில் படித்த படிப்பையே கல்லூரியிலும் படிக்க நுழைவுத் தேர்வு தேவையா? என்பது குறித்து வரைவு அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரத்தில், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் மாணவர் சேர்க்கை வாயிலாக சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று கடந்த ஜூன் 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் எந்த மாற்றமாக இருந்தாலும், அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மானியக்குழு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, பல்கலைக்கழக மானியக்குழு இப்போது அறிவித்திருக்கும் அனைத்து சீர்திருத்தங்களும் மாணவர்களை நுழைவுத்தேர்வு முறைக்கு கொண்டு வருவதற்கான தூண்டில்கள் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நுழைவுத்தேர்வுகள் சமூகநீதிக்கு எதிரானவை என்பதால் அவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியாக புதிய, புதிய வடிவங்களில் நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டால், தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிக்கல்விக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும்.
பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து மாணவர்களும் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகி விடும். அது சமூக நீதிக்கு நன்மை செய்யாது.
நுழைவுத்தேர்வுகள் என்பது ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நுழையாத் தேர்வு என்பதை பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.
தமிழகத்தில் ஊரக, ஏழை மாணவர்களின் தொழில்கல்விக்குத் தடையாக இருந்த மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்தி அகற்றியது பாமக தான்.
ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் ஓர் அடி முன்னேறினால், இரு அடி பின்னேறுவதைப் போலத் தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை மத்திய அரசு பறித்துக் கொண்டது.
அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் மறைமுகமாக நுழைவுத் தேர்வுகளை திணிக்க நடவடிக்கைகள் எடுப்பது அநீதியானது. அவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது.
12ம் வகுப்பில் ஒருவர் எந்த பாடப்பிரிவைப் படித்தாலும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்லூரியில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பன உள்ளிட்ட யோசனைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்டு, அதனடிப்படையில் முடிவு எடுக்கலாம். ஆனால், எந்த வகையிலும் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயலக்கூடாது" என்று மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to Central Govt College Entrance Exam