திண்டிவனம் மாணவிக்கு பாலியல் தொல்லை: "சாரை" காப்பற்ற எம்எல்ஏ & போலீஸ்! கொந்தளிப்பில் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவிக்கு அதே கல்லூரியின் பொருளியல் பேராசிரியர் ஜி.குமார் என்பவர் தொலைபேசி மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தமது விருப்பத்திற்கு இணங்கும்படி மிரட்டல் விடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மாணவ, மாணவியருக்கு நல்லொழுக்கத்தை போதிக்க வேண்டிய பேராசிரியரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து கல்லூரி முதல்வரிடம்  சம்பந்தப்பட்ட மாணவி புகார் கொடுத்த நிலையில், அதனடிப்படையில்  சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவியின் புகாரை காவல்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி நிர்வாகம் கோரியிருக்க வேண்டும். 

ஆனால், திண்டிவனம் அரசு கல்லூரியின் முதல்வரும், வணிகவியல் துறையின் தலைவரும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு சாதகமாக செயல்பட்டு, அவரைக் காப்பாற்ற  முயன்றுள்ளனர்.  இது குறித்து செய்தியறிந்த பா.ம.க. நிர்வாகிகள்  கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்த பிறகு தான் மாணவியின் புகார் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

மாணவியின் புகார் அடிப்படையில்  சம்பந்தப்பட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரைக் காப்பாற்றுவதற்காக  வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி என்பவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நின்று அவருக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய  சட்டமன்ற உறுப்பினர், குற்றவாளியின் பக்கம் நிற்பது கண்டிக்கத்தக்கது.  இதன் மூலம் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை அவர் இழிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இத்தகைய சீரழிவுக்கு  திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் முதல் திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர்  கலைக்கல்லூரி  வரை  எண்ணற்ற கல்வி நிறுவனங்களில்  மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளும், பாலியல் தொல்லைகளும் அளிக்கப்படுவதற்கு காரணம் அங்கு நிலவும்  பாதுகாப்பற்ற சூழலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கல்வி  நிறுவன நிர்வாகம் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை பலரும் ஆதரவாக இருப்பதும் தான்.  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரும்,  அதற்கு துணை போவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் பணியாமல், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  பேராசிரியர் குமாருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்ததற்கு  இணங்க  பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரின் கல்விச் சான்றுகளை ரத்து செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Condemn to Dindivanam College girl Harassment DMK ADMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->