திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை - டாகடர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி, திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.
சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி?
தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள்.
ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறி விடாதா?
திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை.மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலை திசை திருப்புவதற்குத் தான் திமுக அரசு முயல்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொலை - கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், திமுகவுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர் தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin