அப்பாவி ஏழைக் குழந்தை பலி! தமிழக அரசு வெட்கப்பட வேண்டும் - கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Tamilnadu
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை, மருத்துவம் அளிப்பதற்கும், கண்காணிக்கவும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பத்தூரை அடுத்த பெரிய முக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற ஒன்றரை வயது குழந்தை கடுமையான காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தையின் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அக்குழந்தையை கவனிக்க அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே மருத்துவம் அளித்து வந்துள்ளனர். போதிய கவனிப்பும், ஆய்வும் இல்லாத நிலையில் பாக்டீரியா தாக்குதலால் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படுவதற்கு தகுதியுடைய மருத்துவமனை ஆகும். அப்படியானால் அங்கு எவ்வளவு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும், எத்தகைய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எளிய மனிதர்களுக்கும் கூட தெரியும்.
ஆனால், தேவையான எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் கேட்டால் அந்த மருத்துவமனையில் தாம் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாக அந்தக் குழந்தைக்கு மருத்துவம் அளித்த மருத்துவர் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இது குறித்து தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரத்திற்கும் கூடுதலான மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கமே குற்றஞ்சாட்டி, போராட்டமும் நடத்தியுள்ளது. அரசு மருத்துவர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கத் தவறியதன் விளைவாகத் தான் அப்பாவி ஏழைக் குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஓர் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய 3 முதன்மைத் துறைகளில் மருத்துவத்துறையும் ஒன்று. அத்துறையில் அரசு காட்டும் அக்கறை இது தானா? குழந்தையின் இறப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பயனளிக்காமல் ஒரு குழந்தை கூட இறக்கக்கூடாது என்று கலைஞர் காலத்திலிருந்தே முதலமைச்சராக இருப்பவர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், களத்தில் தான் நிலைமை வேறாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மிக வேகமாக சீரழிந்து கொண்டிருக்கின்றன. இதற்காக தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். இனியாவது அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமித்து அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும் மக்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Tamilnadu