ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் சட்டம்... தேவர் பெருமகனாரின் குருபூசை நாளில் டாக்டர் இராமதாஸ் சொன்ன செய்தி!  - Seithipunal
Seithipunal


தேச, சமூக விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனாரின் குருபூசை நாளில் அவரின் மேன்மையை போற்றுவோம் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களின் விடுதலைக்காகவும் போராடிய  பசும்பொன் தேவர் பெருமகனார் அவர்களின் 117-ஆவது பிறந்தநாளும், 62-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம்.

தமது வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்துக்  கொண்ட அவரது அணுகுமுறையை  அனைவரும் கடைபிடிக்க உறுதியேற்போம்.

சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க  வேண்டும் என்ற உணர்வு தான் அவரது அரசியல் பயணத்தை வழி நடத்தியது.

காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே  தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்தவர் தேவர் பெருமகனார். 

காங்கிரஸ் கட்சியிலும்,  பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியிலும் இணைந்து தேச விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனார், விடுதலைக்கு பிறகு தாம் சார்ந்த மக்களுக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தி குற்றப்பரம்பரை சட்டத்தை ரத்து செய்ய வைத்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்காகவும் போராடிய பெருமகனாரின் வாழ்க்கை அனைவருக்கும் முன்னுதாரணம். அதனால் தான் அனைத்துத் தலைவர்களாலும் வணங்கப்படும் தலைவராகவும், அனைத்து மக்களாலும் வழிபடக்கூடிய தலைவராகவும் பசும்பொன் தேவர் திகழ்கிறார். அவரின் மேன்மையை இந்த நாளில் போற்றுவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Say About Devar Guru Poojai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->