மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
PMKK Anbumani Ramadoss Condemn to TNGovt Udhay Tamil Thai Vazhthu
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்டுள்ளது.
அது சுட்டிக்காட்டப்பட்டு இரண்டாவது முறையாக பாடப்பட்ட போதும் பிழைகளுடனே பாடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசு நிகழ்ச்சியில் பிழைகளுடன் பாடப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுடன் தான் பாடப்பட்டது. அதில் ’’தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற பகுதி விடுபட்டிருந்தது.
அதுவும் வேதனையளிக்கக் கூடியது தான். இரு நிகழ்வுகளுமே மனிதப் பிழைகள் தான்; இரு நிகழ்வுகளிலுமே உள்நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பதை தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் அறிவார்கள்.
ஆனால், சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த தவறுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒரு தரப்பினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதன் எதிரொலியாக இன்றைய நிகழ்ச்சியில் நடந்த தவறை இன்னொரு தரப்பினர் சர்ச்சையாக்குகின்றனர். இரண்டுமே தவறான அணுகுமுறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இனிவரும் காலங்களிலாவது தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையின்றி பாடுவதை உறுதி செய்வதில் தான் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அரசியலாக்குவதால் எந்த பயனும் இல்லை.
எனவே, சென்னைத் தொலைக்காட்சி நடத்திய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டதைப் போன்று, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த துறை மன்னிப்பு கேட்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இத்தகைய தவறு நிகழ்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசுகளிலும் உள்ள பணியாளர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பிழையின்றி பாடுவதற்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பயிற்சியளிக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMKK Anbumani Ramadoss Condemn to TNGovt Udhay Tamil Thai Vazhthu