#PTRfiles:: அண்ணாமலையின் அரசியல் தரம் இவ்வளவுதான்.. "பிரிக்க நினைக்கும் பிளாக் மெயில் கும்பல்".. பி.டி.ஆர் பரபரப்பு அறிக்கை..!!
PTR explanation again about audio released by Annamalai
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து பேசியதாக இரண்டாவது ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அந்த அறிக்கையில் "எனது இந்த அறிக்கை 22 ஏப்ரல் 2023 அன்று நான் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின் தொடர்ச்சியாகும்.
இதனை தொடர்வதற்கு முன்னர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படி போலி காணொளிகளை உருவாக்கும் என்பதற்காக சில உதாரணங்களை நான் காண்பிக்க விரும்புகிறேன். இத்தகைய உண்மை போன்று தோற்றமளிக்கும் வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும் என்றால் ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியும், எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலோ அல்லது தனிப்பட்ட உரையாடலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன் வராதது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடன் சொல்லாத ஒன்றை ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தனமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலில் தரம் இவ்வளவுதான். மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம்.
இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம். இத்தகைய உயரிய இலக்குகளை அடையும் நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இவை கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகள் ஆகும். இதனை நேரடியாக ஒப்பு நோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல்வேகம் தெரியும்.
இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்தியாக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார்.
எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலுவர்த்தி அவர்களின் நானும் ஒருவன். அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சரை போலவே கள ஆய்வு சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல் வீரரை குறித்து நான் எப்படி தவறாக பேசுவேன்..? அதேபோன்று நமது திராவிட மாடல் ஆட்சியின் அனைத்து அமைச்சர்களும் ஒரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேச வேண்டும்?
நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு.சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட திரு.உதயநிதி மற்றும் திரு.சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இது போன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலமாக தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம். அறம் வெல்லும்.!" என அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
PTR explanation again about audio released by Annamalai