#BREAKING || திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.. நிதியமைச்சர் பி.டி.ஆர் பெயர் நீக்கம்.!!
PTR name removed from DMK govt performance public meeting
திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3ம் நிலை ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 1222 இடங்களில் திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை குறித்தான விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பகுதிவாரியாக 1222 இடங்களில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டங்களில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தலைமை கழக பேச்சாளர்கள் பங்கேற்று திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து பேசினர்.
இந்த பொதுக்கூட்டமானது நேற்று தொடங்கி நாளை வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட மாநகர் திமுக சார்பில் சிம்மக்கல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசின் சாதனைகள் குறித்து பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேச்சாளர்களின் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனின் பெயர் இடம் பெற்றுள்ளது.
மேலும் மதுரை மாவட்டம் மாநகர் சார்பில் சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்கவில்லை. அதேபோன்று பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்ட பேனரிலும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது குறித்து இருமுறை முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். மேலும் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடிவதற்கு முன்பே பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியேறிய சம்பவமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்ட பேச்சாளர்கள் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ள நிலையில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது பல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் நிலை வரும் நிலையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை ஓரங்கட்டி இருப்பது திமுகவில் உட்கட்சி பூசலை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
PTR name removed from DMK govt performance public meeting