முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்! சிறையில் இருந்த படியே ஆயுள் தண்டனை கைதி செய்த சம்பவம்!
Rajasthan CM BJP
ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் ஷர்மாவிற்கு சிறையில் உள்ள கைதி ஒருவர் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பஜன்லால் ஷர்மா முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜெய்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்த அழைப்பில், முதல்வர் பஜன்லால் ஷர்மாவை கொலை செய்வதாக அநாமதேய நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த அழைப்பு தௌஸா மாவட்டத்திலுள்ள சலவாஸ் சிறைச்சாலையில் இருந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், போலீசாரின் விசாரணையில், அதிகாலை 3 முதல் 7 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 29 வயதான கைதி ரிங்குவே மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.
மேலும், அவரிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதி எப்படி தொலைபேசி பயன்படுத்தினான், அதற்குப் பின்னணியில் உள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் தற்போது இறங்கியுள்ளனர்.