அண்ணாமலையை தொடர்ந்து கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
Rameswaram Fishermen TamilNadu
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலினும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதாக கவலையோடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்கு வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
Rameswaram Fishermen TamilNadu