ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை அழிக்கும் தமிழக அரசு? அதிரவைக்கும் பின்னணி.! பரபரப்பு அறிக்கை.!
rb udhayakumar critiziced dmk over jallikattu stadium in madurai
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் பின் அப்போதைய அதிமுக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றதால் தமிழத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது. அதனை தொடர்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்து வந்தனர். அதே கோரிக்கைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்கோரிக்கையை பரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்ஜல்லிக்கட்டு மைதானத்தை எதிர்த்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது முன்னோர்களின் வார்த்தை. நமது பண்பாடு, நாகரிகத்தின், வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசல் வழியாக மாடுகள் அனுப்பப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது தமிழர்கள் பாரம்பர்யமாகக் கடைபிடித்து வரும் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தப்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
பொதுவாக கிராமங்கள்தோறும் குல தெய்வங்களை வழிபட்டு, வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். இப்படி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுதான் வீரத்தின் அடையாளம், அது கண்காட்சிக் கூடம் அல்ல. மண்வாசனை மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, எங்கள் கருத்தை கேட்காமல் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தாதீர்கள் என மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு மைதானம் எந்த நாட்டிலும் கிடையாது. இந்த புத்திசாலித்தனமான முடிவை யார் கூறியது என்று தெரியவில்லை, இல்லாத ஒன்றை உருவாக்கக் கூடாது. நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அலங்காநல்லூர் வாடிவாசலில் தனது பொற்கரங்களால் பச்சைக்கொடியை அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து, ஒரு முதலமைச்சர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் என்ற வரலாற்றை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு, பராமரிப்பு செலவுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தனர். அந்த அறிவிப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. அதை வழங்கி காளை வளர்ப்பை ஊக்கப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதை விடுத்து யாருமே கேட்காத, யாருமே விரும்பாத ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்திருப்பது திணிக்கப்படுகிற திட்டமாக உள்ளது.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்றுவதற்கும், ஒவ்வொரு கிராமத்தின் பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதற்கும் அரசு முன் வருமா? மண்வாசனை கொண்ட கிராம பாரம்பர்யத்தின் பண்பாட்டை குழி தோண்டி புதைத்துவிட்டு, பொம்மை விளையாட்டுபோல் ஜல்லிக்கட்டை இந்த மைதானத்தில் நடத்துவார்களா? இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்ற அச்சத்தோடு வாழ்கிற உலகத் தமிழர்களுக்கு முழு விவரத்தை வெளியிடுவீர்களா? என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
rb udhayakumar critiziced dmk over jallikattu stadium in madurai