போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி.! - Seithipunal
Seithipunal


மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஊழல் மற்றும் அரசின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மக்கள் சேவை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகம், கடந்த 50 ஆண்டுகளாக 20 ஆயிரம் பேருந்துகளுடன் ஏழை எளிய மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகின்றது. போதிய வருமானம் இல்லாத குக்கிராமங்களிலும், இலாப நட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல் மக்கள் சேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்கிவரும் அரசுப் பேருந்துகள் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.

ஆனால், அரைநூற்றாண்டுகாலமாக அடுத்தடுத்து தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் கட்டுக்கடங்காத ஊழல் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நட்டத்தில் இயங்குவதோடு பணியாளர்களுக்கு உரிய ஊதியம்கூடக் கொடுக்க முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது தமிழக நிதியமைச்சர், தாங்கமுடியாத கடன்சுமை காரணமாகப் போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க, அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகக் அறிவித்தபோதே அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்தது. போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் அரசின் அம்முடிவிற்குத் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்தன

.

இருப்பினும் அதனை சிறிதும் பொருடப்படுத்தாமல், தற்போது முதற்கட்டமாக சென்னையில் 1000 பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வரும் செய்திகள் பொதுமக்களிடத்திலும், போக்குவரத்து ஊழியர்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறையைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவை இலாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்பதால் பயணிகள் அதிகம் இல்லாத சிறிய கிராமங்களுக்குப் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் பேராபத்து ஏற்படக்கூடும். 

மேலும், விழாக்காலங்களில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவதுபோல், தனியார் பேருந்து முதலாளிகள் தங்கள் விருப்பம்போல் பேருந்து கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவும் வழியேற்படுத்துவதோடு, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். அதுமட்டுமின்றி, மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தற்போது வழங்கப்பெறும் கட்டண சலுகைகளும் நிறுத்தப்படவும் வாய்ப்பு ஏற்படும்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு வங்கி, காப்பீடு, விமானம், தொடர்வண்டி உள்ளிட்ட அனைத்து மக்கள் சேவை பொதுத்துறை நிறுவனங்களையும் தொடர்ந்து தனியாருக்குத் தாரைவார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதனை எதிர்ப்பதாகக் கூறும் திமுக, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்க நினைப்பது எவ்வகையில் நியாயமாகும்? மோடி அரசினைப் போல் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு பெயர் திராவிட மாடலா? ஆரிய மாடலா? 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருக்கும்போது நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியாரிடம் சென்றவுடன் எப்படி இலாபத்தில் இயங்குகின்றன? அரசால் செய்ய முடியாத ஒன்றைத் தனியார் நிறுவனம் சிறப்பாகச் செய்கிறது என்றால் பல இலட்சம் கோடி கடனுள்ள அரசையே ஏன் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது? என்று ஒவ்வொரு குடிமகன் மனதிலும் இயல்பாக எழும் கேள்விக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்?

எனவே, அரசுப் பேருந்துகளை தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைத்து, அதில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து இலாபத்தில் இயங்கச் செய்ய உரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEEMAN SAY ABOUT DMK DRAVIDA MODEL JULY


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->