நாம் வாழும் பூமியானது அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது - தமிழக அரசு அறிவுரை கூறும் சீமான்! - Seithipunal
Seithipunal


காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் காப்புக் காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கல் குவாரிகள் மற்றும் சுரங்கங்களை அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ள உத்தரவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தனியார் குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக மனிதனால் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசின் தொழில்துறை அரசாணையில் அந்தத் தடை நீக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் ஆகியவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழலை அழிக்கும் எவ்வித திட்டங்களுக்கும் அனுமதியளிக்கக் கூடாது என்று ஐ.நா அமைப்பே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் விதிகளும் வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் எவ்வித கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று வரையறுத்துள்ளது. ஆனால், அதையெல்லாம் மீறி ஒரு சில தனியார் கல் குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, அடுத்த தலைமுறைகளுக்குச் சொந்தமான மனிதனால் உருவாக்கவே முடியாத  மலைகளையும், கற்களையும் வெட்டி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதித்திருப்பது பெருங்கொடுமையாகும்.

ஏற்கனவே வனப்பகுதிகளில் உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை காரணமாக வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமின்றி அவற்றின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டு வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் மனிதர் – வன விலங்குகள் மோதல் போக்குகளும் அதிகரித்து இருதரப்பிலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. காடுகளின் பரப்பளவை அதிகரிக்கப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம், காப்புக்காடுகளை அழிக்கும் தமிழ்நாடு அரசின் இத்தகைய அறிவிப்பு முற்றிலும் முரணானதாகும்.

ஆகவே, நாம் வாழும் பூமியானது அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்து, காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வழியுறுத்துகிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Say About Kappukadu Stone Quarry issue dmk Govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->