லீலாவதியைப் படுகொலை செய்த திமுகவினர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால்..., - சீமான்!
Seeman Say About muslim kaithikal issue
மார்க்சிய கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர் அம்மையார் லீலாவதியைப் படுகொலை செய்த திமுகவினர் உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அப்போது நீண்டகால இஸ்லாமியச் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபுதாகிர் சிறைக் கொடுமைகளால் உடல் நலிவுற்று உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்துப் பேசியதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக அரசால் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, எனக்கு அபுதாகிரிடம் பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பின்பு, நீரிழிவு மற்றும் முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவரை மருத்துவமனையில் சந்தித்தேன்.
அவரின் நிலை கண்டு, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமெனப் பலமுறை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தினேன். அவரது உடல்நிலையைக் கருத்திற்கொள்ளாமல் சிறிதும் இரக்கமின்றி விடுதலை செய்ய மறுத்த திமுக, அதிமுக அரசுகளின் கொடுங்கோன்மை மனப்பான்மையே அபுதாகிர் மரணத்திற்கான முக்கியக் காரணமாகும். அபுதாகிரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீண்டகால இஸ்லாமிய சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்வோம் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதியளித்து, இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இஸ்லாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து, பச்சை துரோகத்தைப் புரிந்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு திமுக அரசால் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் விடுதலை என்ற பெயரில் மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினர் அம்மையார் லீலாவதியைப் படுகொலை செய்த திமுகவினர் உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அப்போது நீண்டகால இஸ்லாமியச் சிறைவாசிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் கடந்த 2017-ஆம் ஆண்டு எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளினை முன்னிட்டு 1627 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டபோதும் இஸ்லாமியச் சிறைவாசிகள் எவரையும் விடுதலை செய்யாமல் அதே துரோகத்தைத் தொடர்ந்தது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2021-ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளினை முன்னிட்டு 700 சிறைவாசிகளை விடுதலை செய்தபோதும் கூட, மீண்டும் நீண்டகால இஸ்லாமியச் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து கருணையிலும் மதப்பாகுபாடு காட்டி வஞ்சித்தது.
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான திமுக மற்றும் அதிமுகவின் இத்தகைய தொடர் துரோகச் செயலினைக் கண்டித்தும், நீண்டகால இஸ்லாமியச் சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் சென்னை, கோவை, நாகை ஆகிய பகுதிகளில் எனது தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது. ஆனால், தொடர் போராட்டங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுத்து அதிகாரத்தின் துணைகொண்டு திமுக அரசு தடுத்தது.
மேலும், இஸ்லாமிய மக்களிடம் ஏற்பட்டிருந்த மனக்கொந்தளிப்பினை உணர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாராயணன் தலைமையில் இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை குறித்து ஆராய வழக்கம்போல ஒரு குழுவினையும் அமைத்தது. ஆனால், அக்குழு அமைக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் இஸ்லாமியர் விடுதலையில் இதுவரை ஒரு சிறு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்பதிலிருந்தே அது வெறும் கண்துடைப்பு நாடகம் என்பது தெளிவாகிறது.
இரு திராவிட அரசுகளும் பாஜகவின் எதிர்ப்புக்கு பயந்து, சிறிதும் மனச்சான்று இன்றி இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவே, தற்போது அபுதாகிர் உயிரும் பறிபோயுள்ளது.
இன்னும் எத்தனை இஸ்லாமியச் சிறைவாசிகளின் உயிரைப் பலி கொள்ள திமுக அரசு திட்டமிட்டுள்ளது? சிறைவாசிகள், இஸ்லாமியர் என்பதாலேயே நோய் முற்றும்வரை உரிய சிகிச்சை அளிக்காமலும், விடுப்பு அளிக்காமலும் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? மரணம் மட்டும்தான் அவர்களுக்கான முழுமையான விடுதலையைத் தரமுடியும் என்று திமுக அரசு கருதுகிறதா?
கடுமையான நோயுற்றவர்களை விடுதலை செய்யலாமென சிறைவிதி பிரிவு 632 கூறும் நிலையில், அதன்படி இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசிற்கு என்ன தயக்கம்? கருணை அடிப்படையில் விடுதலை என்று கூறிவிட்டு, கருணையில்கூட திமுக அரசு மதப் பாகுபாடு காட்டுவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’?. சிறை என்பது மனித மனங்களைச் செதுக்கும் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை உயிரோடு சிதைக்கும் கொலைக்களமாக மாறிவிடக்கூடாது.
ஆகவே, திமுக அரசு இனியும் இஸ்லாமிய மக்களை ஏமாற்றாது, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்" என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Seeman Say About muslim kaithikal issue