நாங்கள் மொழிகளின் தாய்மொழியில் தமிழில் பேசிக் கொண்டிருக்கிறோமெனும் பெருமிதமும், திமிரும் கொண்டு கொண்டு வாழ்த்து கூறிய சீமான்.!
Seeman Wish Mother Language day 2022
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல; அது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு இனத்திற்குரிய அடையாளக்கூறுகளான கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, வரலாறு, அறிவியல் என எல்லா விழுமியங்களுக்குமான அடித்தளமாகவும் மொழியே திகழ்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிரே மொழிதான்! மொழியென்பது முன்னவர்கள் பின்னவர்களுக்கு விட்டுச்செல்கிற உயிருடைமையாகும்.
மொழி என்பது மனிதப் படிமலர்ச்சியினுடைய மாபெரும் பாய்ச்சல். தேசப்பரப்பை வரையறுக்கிறபோது நிலப்பரப்பினை வைத்தோ, மதங்களை வைத்தோ வரையறுப்பதில்லை. மொழியை வைத்துதான் தேசங்களும், தேசிய இனங்களும் வரையறைசெய்யப்படுகின்றன. மொழியைத் தொலைத்த இனங்கள் யாவும் மலையளவானாலும் கடுகளவென சிறுத்து வீழ்ந்திருக்கின்றன; மொழியைக் காத்த இனங்களெல்லாம் கடுகளவேயானாலும் மலையளவென உயர்ந்து வாழ்ந்திருக்கின்றன. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பேருண்மையாகும்.
‘நாளை என் தாய்மொழி இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன்’ என்கிறான் அவா மொழி கவிஞன் ரசூல் கம்சத். அயர்லாந்தின் விடுதலைக்குப் போராடியப் புரட்சியாளர் டிவேலேராவிடம், ‘உனக்கு அயர்லாந்து வேண்டுமா? ஐரிசு மொழி வேண்டுமா?’ என்று கேட்டபோது, ‘என் தாய் நிலத்திற்கு இணையான ஒரு நிலப்பரப்பை உலகில் எங்கேனும் ஒரு இடத்தில் என்னால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், என் தாய்மொழி ஐரிசைப் போல ஒரு மொழியைப் பெற முடியாது. எனவே, எனக்கு அயர்லாந்தைவிட என் தாய்மொழி ஐரீசுதான் வேண்டும்’ என்றார். அந்த மொழிப்பற்றும், இன உணர்வும் ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளைக்கும் வர வேண்டும்.
தமிழ்மொழியே உலகின் முதல் மொழியென உலக மொழியியல் பேரறிஞர்கள் ஏற்றுக்கொண்டாடுகிறார்கள். தமிழரே உலகின் முதல் மாந்தனென ஆய்வறிஞர்கள் உரைக்கிறார்கள். உலகிலுள்ள எல்லா இனத்தவர்களும் தங்களது தாய்மொழியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழர்கள் நாங்கள் மொழிகளின் தாய்மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோமெனும் பெருமிதமும், திமிரும் கொண்டு நிற்கிறோம்
உலகத்தாய்மொழி நாளில், தமிழ்த்தாயின் பிள்ளைகளின் உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமும், மகிழ்ச்சியுமடைகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman Wish Mother Language day 2022