சுப.வீரபாண்டியனை கைது செய்ய உத்தரவிடுவாரா முதல்வர் ஸ்டாலின்?
Suba VeeraPandiyan issue Devanadhan statement
பிராமண சமுதாயத்தை மிரட்டும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழு உறுப்பினர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
இதனால் அவரை அரசு பதவியிலிருந்து நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒருவரை அரசு பதவியில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கருத்தியல் ரீதியாக மோதுவதற்கு திறனற்ற சில புல்லுருவிகள் பத்ரி சேஷாத்ரியை அவரது சமுதாயம் சார்ந்து விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக பல தலைவர்களை திராவிடர் கூட்டம் ஆபாச வார்த்தைகளால் வசைபாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், பிராமண சமுதாயத்தின் பூணுலை கத்தரித்து விடுவேன் என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மிரட்டும் பாணியில் பேசியிருக்கிறார்.
தமிழகத்தில் பிராமண சமுதாயத்தின் மீதான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து விட்டன. ஆளும் திமுகவை சார்ந்தவர்களே பொது மேடையில் பிராமண சமுதாயம் குறித்து வன்மமாக பேசுகின்றனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. தனிப்பட்ட நபரை விமர்சிக்க வேண்டுமென்றால், அவரை கருத்தியல் ரீதியாக தான் விமர்சிக்க வேண்டும்.
அதை விடுத்து அவர் சார்ந்திருக்கும் சமுதாயத்தை அருவருக்கத்தக்க வன்ம பேச்சுக்களை பேசி அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது. அரசியல் லாபத்திற்காக வாயை வாடகைக்கு விட்டு வயிற்றை நிரப்பும் வியாபாரிகளுக்கு தமிழக அரசும் காவல்துறையும் கடிவாளம் போடவேண்டும். திமுக ஆட்சி அனைவருக்குமான ஆட்சி என அறுதியிட்டு பேசிவரும் முதலமைச்சர், சுப.வீரபாண்டியனை கைது செய்து அதை நிரூப்பிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Suba VeeraPandiyan issue Devanadhan statement