ஆணவத்தோடு வரம்பை மீறி பேசுவதா? திமுக நிர்வாகிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய, தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி, பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசி இருப்பதற்கு, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "ராஜிவ்காந்தி வரம்பை மீறி, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் மிகுந்த ஆணவத்தோடு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரின் மனம் புண்படுமாறு பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன். 

இப்படி பேசுவதற்கு அவருக்கு எப்படி துணிவு வந்தது என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்த போதே தி.மு. கழக தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களையெல்லாம் நாக்கில் நரம்பின்றி மிகமிக கீழ்த்தரமாக பேசியவர். அங்கிருந்து சீமானால் விரட்டப்பட்டு, தி.மு.க.வில் தஞ்சம் புகுந்தவர் தான் ராஜிவ்காந்தி. இத்தகைய பின்னணி கொண்ட ஒருவர் பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

பெருந்தலைவர் காமராஜர் 1954 ஆம் வருடம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 அன்று முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் ஆதரிக்க தொடங்கிய தந்தை பெரியார், காமராஜர் ஆட்சி செய்த ஒன்பதரை ஆண்டுகாலமும் பாராட்டி பேசியதை எவரும் மறந்திட இயலாது. 

1961 ஆம் ஆண்டில் காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு காமராஜரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள், அவரை விட்டால் தமிழர்களுக்கு வேறு ஆளே சிக்காது என்று பேசி 1962 தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரப்புரை மேற்கொண்டவர் தந்தை பெரியார். 

அவரும், பெருந்தலைவர் காமராஜரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே எந்தளவிற்கு காமராஜர் ஆட்சியை எப்படி தாங்கி பிடித்தார் என்ற வரலாறெல்லாம் ராஜிவ்காந்தி போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

1954 இல் காமராஜர் முதலமைச்சரானதும் குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தவிர எவரும் எதிர்த்து போட்டியிடவில்லை. தந்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். தி.மு.க. அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லையே தவிர, அண்ணா அவர்கள் குணாளா, குலக்கொழுந்தே என்று எழுதி ஆதரித்தார். இத்தகைய வரலாற்று பின்னணியோடு தான் பெருந்தலைவர் காமராஜர் தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu youth Congress Condemn to DMK Rajiv Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->