திமுகவில் வாரிசு உருவானதே 2 வருட சாதனை.. போட்டுத் தாக்கிய தமிழிசை..!!
Tamilisai said succession to DMK is 2year achievement
கோவை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சென்ற தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது "இன்று நான் இரண்டு முதலமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். நான் பிறந்த மாநிலம் என்ற வகையில் அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், நான் இப்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கின்ற புதுவை மாநிலத்தின் முதலமைச்சர் அண்ணன் ரங்கசாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் சாதனைகள் வந்து கொண்டிருக்கிறது. எல்லாரும் இரண்டு ஆண்டுகள் சாதனை பற்றி பேசும் பொழுது "ஜாதி மதம் பிரித்துப் பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது" என முதல்வர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். நான் அவரிடம் சிறிய கேள்வி ஒன்றை கேட்க விரும்புகிறேன்.
எப்படி பிரித்துப் பார்ப்பதனால் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்..? நான் தமிழகத்தில் பிறந்த ஒரு இந்துவாக, ஒரு தனி நபராக இந்த கேள்வியை நான் கேட்கிறேன். எதை வைத்து நீங்கள் பிரித்துப் பார்ப்பதனால் தீபாவளிக்கோ, விநாயகர் சதுர்த்திக்கோ வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்..? ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறார்.
ஆளுநர் என்ற முறையில் நானும் அனைத்து விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறேன். ஆனால் நீங்கள் எப்படி பிரித்து பார்ப்பதால் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் என்பதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். இன்றைய பத்திரிக்கையில் நிறைய விளம்பரங்கள் பார்க்கிறேன். எல்லா அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் நிறைய விளம்பரங்கள் கொடுத்துள்ளனர்.
எல்லா அமைச்சர்களின் துறைகளிலும் நிதி இருக்கிறதோ..! இல்லையோ..! அனைத்து விளம்பரங்களிலும் உதயநிதி இருக்கிறார். ஓராண்டு, இரண்டு ஆண்டு சாதனைகளில் வாரிசு உருவானது இன்னொரு சாதனை. அறிவிப்புகள் திரும்பத் திரும்ப வரலாம். ஆனால் அறிவிப்புகளை திரும்ப பெரும் ஆட்சியாகவும் இந்த ஆட்சி இருந்து வருகிறது.
அதனால் இன்னும் அதிகமாக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. இன்று முதல்வர் பிரித்துப் பார்க்கவில்லை என கூறினால் கூட வேங்கைவயல் போன்ற பிரச்சனைகள் எல்லாம் பூதாகரமாக இருந்து வருகிறது" என திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Tamilisai said succession to DMK is 2year achievement