கோடி ரூபாய் கேட்ட திருமாவளவனை அம்பலப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது - தடா.பெரியசாமி.!
THADA PERIYASAMI TWIT
கடந்த 2003ஆம் ஆண்டு கடலூரில் கண்ணகி - முருகேசன் ஆகியோர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் நீதிமன்றம் 13 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், திருமாவளவன் குறித்தும் பாஜகவை சேர்ந்த தடா டி. பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்கறிஞர் பி.ரத்தினம் ஆகியோர் அளித்த பேட்டிகள் மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற முகநூல் பக்கம், ஆதவன் தீட்சன்யாவின் தந்துகி என்ற ப்ளாக்ஸ்பாட், ஜூனியர் விகடன் இதழ் ஆகியவற்றில் வெளியாகியது.
இந்த பேட்டிகள் திருமாவளவனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உணமைத்தன்மையை விசாரிக்காமல், அவதூறு தகவல்களை மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் பிளாக்ஸ்பாட்டில் மறுபதிவு செய்துள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை தடை செய்யவேண்டும். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவுசெய்ய 8 எதிர் மனுதாரர்களுக்கு தடை விதிக்க வேண்டும், மேலும், அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என, திருமாவளவன் அந்த மனுவில் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துக்களை எதிர்மனுதாரர்கள் வெளியிட தடைவிதித்த நீதிபதி, அவரின் மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர், மூத்த தலித் தலைவர் தடா.பெரியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், "அன்பார்ந்த நண்பர்களே வணக்கம்! இன்றைய 3.12.2021 செய்தித்தாள்களில் 1-கோடி நஷ்ட ஈடு கேட்டு என்மீதும் வழக்கறிஞர் ரத்தினம் மற்றும் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு அவர்கள் மீதும் திருமாவளவன் வழக்கு கொடுத்துள்ளதாக அறிந்தேன்.
நீதிமன்றம் வாயிலாக திருமாவளவனை அம்பலப்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. "என்னிடம் கோடிகள் இல்லை! காவி கொடிகள் நிறைய உள்ளது! கூடாநட்பு! கேடாய் முடியும்!! என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.