1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்: சீமான் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் உதவியாளர், காவலாளிகள், தூய்மை பணியாளர்கள், தோட்டக்கலை தொழிலாளிகள் என ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் பணிபுரியும் நிரந்தர அரசுப் பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக மாற்றி தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசுத்துறையில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடி வரும் நிலையில், ஏற்கனவே உள்ள 1.5 லட்சம் நிரந்தரப் பணியிடங்களையும் ஒரே கையெழுத்தில் தற்காலிக பணியிடங்களாக தி.மு.க. அரசு மாற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் காலியாகவுள்ள 3.5 லட்சம் அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 லட்சம் அரசுப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும், தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்து, அதிகாரத்தை அடைந்த தி.மு.க. அரசு, கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஒரு லட்சம் அரசுப்பணியிடங்களைக் கூட இதுவரை நிரப்பவில்லை என்பது வெட்கக்கேடானது. இந்நிலையில் ஏற்கனவே உள்ள 1.5 லட்சம் அரசுப் பணியிடங்களையும் தற்காலிக பணியிடங்களாக மாற்றி தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்டுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலாளிகள், தூய்மை பணியாளர்கள், தோட்டக்கலை தொழிலாளிகள் உள்ளிட்ட பணியிடங்களானது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி அந்த 1.5 லட்சம் அரசுப் பணியிடங்களிலும் இனி வரும் காலங்களில் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய முடியாது என TNPCR ACT 1976-ல் தி.மு.க. அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஒப்பந்த அடிப்படையிலேயே 1.5 லட்சம் அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

அரசு நிறுவனங்களை மெல்ல மெல்லத் தனியாருக்குத் தாரை வார்ப்பது, அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியிடங்களாக மாற்றித் தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதுதான் தி.மு.க. அரசின் சாதனையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? எல்லாவற்றையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதென்றால் அரசு எதற்கு? ஆட்சி அதிகாரம் எதற்கு? துறை வாரியாக அமைச்சர்கள் எதற்கு?

ஆகவே, பாமர மக்களின் அரசுப்பணி கனவை முற்று முழுதாக சிதைத்தழிக்கும் வகையில் 1.5 அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை தி.மு.க. அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The government order to convert One and a half lakh government jobs into temporary jobs should be withdrawn Seeman condemns


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->