அண்ணாமலைக்கு ஆப்பு? உட்கட்சி பூசல்! தலைமை எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் தமிழக பாஜக!
TN BJP Annamalai tamilisai issue
தமிழ்நாடு பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் தற்போது மாநில தலைவராக உள்ள அண்ணாமலைக்கும், முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து கட்சி மேல் இடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மக்களவை பொதுத் தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்த நிலையில், இந்த தோல்விக்கு அண்ணாமலை செயல்பாடுகளை காரணம் என்று பாஜகவை சேர்ந்த சில நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் அண்ணாமலைக்கு எதிராக போர் கொடி தூக்கினர். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அவர் வலியுறுத்த, அதிமுகவுடன் பாஜக கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை இருந்ததாகவும், இதனால் பெரும் தோல்வியை சந்திப்போம் என்று அந்த மூத்த நிர்வாகிகள் குரல் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
குறிப்பாக ஆளுநர் பதவியை தூக்கி எறிந்து விட்டு அண்ணாமலைக்கு ஒரு முடிவு கட்டவே தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் அரசியல் கால் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை குறித்து நேரடியாகவே கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
மேலும், அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையின் செயல்பாடுகள், மற்ற கட்சியின் மற்ற நிர்வாகிகளுடன் அவர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், மக்களவைத் தேர்தலில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்து பாஜகவின் மேல் இடம் அறிக்கை கேட்டுள்ளது.
இந்த அறிக்கையை பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் மேல் இடத்துக்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
TN BJP Annamalai tamilisai issue