ஒரே அரசாணையில் மூடுவிழா நடத்திய திமுக அரசு! பெரும் அதிர்ச்சியில் டிடிவி தினகரன் விடுத்த அறிக்கை!
TNGovt order AMMK TTV Dhinakaran condemn
ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக செயல்பட்டு வந்த ஓய்வுதிய இயக்குநரகத்திற்கு மூடுவிழா நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் ஆகிய துறைகளை கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதோடு, இரு துறை தலைவர்களின் பதவியையும் பறிக்கும் வகையிலான அரசாணையை தமிழக அரசின் நிதித்துறை பிறப்பித்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அரசாணை, பழைய ஓய்வூதியத் திட்டம் எனும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை எக்காலத்திற்கும் நிறைவேறாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அறிவித்த ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாத திமுக அரசு, தற்போது ஓய்வூதிய இயக்குநரகத்திற்கும் மூடுவிழா நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுமார் 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வு காண தனியாக இயக்குநரகம் இல்லாமல், கருவூல கணக்குத் துறையின் தலைவரே அதனையும் சேர்ந்து கவனிப்பார் என்ற தமிழக அரசின் அரசாணை எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
எனவே, மறுசீரமைப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஓய்வூதிய இயக்குநரகத்திற்கு மூடுவிழா நடத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற்று ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
TNGovt order AMMK TTV Dhinakaran condemn