நாளை ஆரம்பமாகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்..! எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?!
Tomorrow First Parliamentary Session Will Begin
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நாளை முதல் முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளது. மேலும் இது 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல்வேறு புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன.
இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களும் மக்களவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் நடைபெறும். அதன் பிறகான கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் மக்களவையின் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் நடைபெறும்.
இந்நிலையில் பாஜக சபாநாயகர் பதவிக்கு இதுவரை யார் பெயரையும் அறிவிக்கவில்லை. அதேபோல் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று இந்தியா கூட்டணியும் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் விரும்புவதாக தெரிகிறது.
இந்நிலையில் வரும் ஜூன் 27ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வில் உரை நிகழ்த்தவுள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும்.
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் ரத்து, அக்னிவீர் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இந்த முதல் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
English Summary
Tomorrow First Parliamentary Session Will Begin