CSI சொத்துக்களை அபகரிக்க முயற்சி.. திமுகவின் உண்மையான முகம் இதுதான்..!! டிடிவி தினகரன் ட்விட்..!!
TTV Dhinakaran insists Gnanathiraviyam should be arrested
திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஞானதிரவியத்தை நெல்லை மாவட்ட சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் கல்வி நிலை குழு செயலாளர் மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கி பேராயர் பர்ன்பாஸ் உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் நெல்லை மாவட்ட சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தை பூட்டியதோடு வேற யாரும் உள்ளே நுழையக் கூடாது என அலுவலகத்தின் வாசலிலேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊழிய ஸ்தானத்தின் பிஷப் காட்பிரே நோபல் அலுவலகத்திற்குச் சென்றார்.
அப்பொழுது அவரை தடுத்து நிறுத்திய திமுக எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதோடு அடித்து ஓட விட்டனர். தொடர்பாக அவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உட்பட அவரது ஆதரவாளர்கள் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரில் கல்விக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிய பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி., ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
சிறுபான்மையினர்களின் பாதுகாவலர் எனக் கூறிக் கொள்ளும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடந்திருப்பது திமுகவின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரத் தாக்குதல் நடத்திய அவர், மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர். வெறுமனே வழக்குப்பதிவு மட்டும் செய்யாமல் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
TTV Dhinakaran insists Gnanathiraviyam should be arrested