விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி!
TTv Dhinakaran Say About Parandur Formers issue
பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதனை ஏன் தமிழக அரசு காதில் வாங்கவில்லை என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்?
மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை. பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் ஏறத்தாழ 3,500 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் அளிக்கும் பழமை வாய்ந்த கம்பன் கால்வாயில் 7 கிலோ மீட்டர் தூரம் அழிக்கப்படுவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
விமான நிலையம் போன்ற வளர்ச்சித் திட்டம் தேவைதான் என்றாலும், அது நமக்கு சோறுபோடும் விவசாயத்தை அழித்து கொண்டுவரக்கூடியதாக இருக்கக்கூடாது.
இதே போன்ற பிரச்னை கோவை மாவட்டம் அன்னூரில்(TIDCO) ஏற்பட்டபோது, விளைநிலங்களை கையகப்படுத்தப்போவதில்லை எனத் தமிழக அரசு அண்மையில் உறுதியளித்திருக்கிறது. பரந்தூர் பகுதிக்கு மட்டும் அந்த உறுதிமொழி பொருந்தாதா என்ன? " என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
TTv Dhinakaran Say About Parandur Formers issue