மத்திய பட்ஜெட் மகிழ்ச்சி அளித்தாலும்.., கவலை அளிக்கிறது - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட் - 2022 ; திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடாமல் செயல்பாட்டுக்கும் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், சிறு-குறு தொழிலுக்கு உதவி, விவசாயத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கு நிதி உள்ளிட்ட சில அறிவிப்புகள் மகிழ்ச்சி அளித்தாலும் எல்.ஐ.சி. பங்கு விற்பனை, நீர்பாசனத் திட்டங்களில் தனியார் மயம், தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள் கவலையளிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், காவிரி-பெண்ணாறு இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே இருக்கும் முக்கியமான இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் இந்த ஆண்டிலாவது செயல்பாட்டளவில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

சிறு-குறு தொழில்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கடனுதவி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவை ஆறுதல் அளிக்கின்றன. அதே நேரத்தில் கொரோனா பேரிடரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறு-குறு தொழில் நிறுவனங்கள் முழுமையாக அதிலிருந்து மீண்டு வருவதற்கு கடனுதவி மட்டும் போதாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் பாராட்டத்தக்கது. எனினும், உரமானியம், இடுபொருள் விலை உயர்வைக் கட்டுப்பாட்டில் வைப்பது பற்றிய தெளிவான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. 12-ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வியை ஊக்குவிப்பது என்ற அறிவிப்பை வேறெந்த மாற்று சிந்தனையும் இல்லாமல் செயல்படுத்திட வேண்டும்.

புதிய ரயில்கள், சரக்கு முனையங்கள் குறித்த அறிவிப்பும், அஞ்சல் நிலையங்கள் மின்னணுமயமாக்கப்படும் என்பதும் சாதாரண மக்களுக்கு பயளிப்பதாக இருக்கும்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையாக உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் மத்திய அரசு காட்டும் உறுதி கண்டனத்திற்குரியது. இதேபோல  நீர்ப்பாசனத்திட்டம் உள்ளிட்டவற்றிலும் தனியாரின் பங்களிப்பைக் கொண்டுவரப்போவதாக அறிவித்திருப்பது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

மேலும் ஒரே நாடு, ஒரே பதிவு (One Nation-One Registration) திட்டம் மாநில அரசுகளின் வருவாயில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு அதனைக் கைவிட வேண்டும்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN SAY ABOUT UNION BUDGET 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->